வெள்ளத்தில் வங்கி விவரம், ஏடிஎம் கார்டு தொலைந்திருக்கலாம் என்பதால் நிவாரண தொகை ரூ.6,000 ரொக்கமாக வழங்கப்பட்டது: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: வெள்ளத்தில் ஏடிஎம் கார்டுகள், வங்கி விவரங்களை மக்கள் தொலைத்திருக்கக் கூடும் என்பதால் நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்க உத்தரவிடப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தக் கோரி முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவரும், நிவாரண தொகையை அதிகரித்து வங்கி கணக்கில் வழங்க வேண்டும் என்று சட்டக் கல்லூரி மாணவன் செல்வகுமார் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்குகள் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துகுமார் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 24 லட்சத்து 25 ஆயிரத்து 336 குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.1450 கோடியே 20 லட்சம் நிவாரண உதவியாக விடுவிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 15ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதேபோல, நிவாரண உதவிகோரி விண்ணப்பித்த குடும்பங்களில் தோராயமாக 10 சதவீத குடும்பத்தினருக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் 31 கோடியே 74 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதுவரை, 23 லட்சத்து 18 ஆயிரம் குடும்பங்களுக்கு நியாயவிலை கடைகள் மூலமாக, நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. நிவாரணத் தொகை கோரி அளிக்கப்பட்டுள்ள 7 லட்சத்து 3 ஆயிரத்து 170 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வங்கி மூலம் நிவாரணத் தொகை டெபாசிட் செய்யப்படும்.

மழை, வெள்ளம் காரணமாக ஏடிஎம்கள் செயல்படாததாலும், பயனாளிகள் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற தாமதமாகும் என்பதாலும், மழை வெள்ளத்தில் வங்கி கணக்கு விவரங்கள், ஏ.டி.எம் கார்டுகள் தொலைந்திருக்கக் கூடும் என்பதாலும், நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்க உத்தரவிடப்பட்டது. சட்டம், ஒழுங்கு பிரச்னை இல்லாமல், ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பலியானவர்களுக்கான இழப்பீடு, பயிர் சேதத்திற்கான இழப்பீடு, கால்நடைகளுக்கான இழப்பீடு, சேதமடைந்த படகுகளுக்கான இழப்பீடுகளை அதிகரித்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணையை பிப்ரவரி 2ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!