தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடர் என அறிவிக்க முடியாது : ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

சென்னை : சென்னை வானிலை மையம் அதிநவீனமானது. உரிய வானிலை முன்னெச்சரிக்கையை வழங்கியுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்திப்பு மேற்கொண்டனர். சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தென் மாவட்ட மழை வெள்ளத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர்.உள்துறை அமைச்சகத்தில் இருந்த 2 கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் கண்காணித்தன.தென் மாவட்ட வெள்ள பாதிப்பில் இருந்து 42 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் டிச.21 வரை 42290 பேரை தமிழ்நாடு போலீஸ், தீயணைப்பு மீட்புப்படை, மாநில, தேசிய பேரிடர்
மீட்புப்படையினர் மீட்டனர்.

இந்திய விமானப்படையின் 9 ஹெலிகாப்டர்கள் 70 நடைகள் சென்று
மீட்புப்பணியில் ஈடுபட்டன.ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய 800க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர்.தமிழ்நாட்டின் நலனுக்காக பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் செயல்படுகின்றனர். தென்மாவட்ட மழை பாதிப்பு அறிந்தவுடன் உதவிகளை செய்ய பிரதமர், உள்துறை அமைச்சர் அறிவுறுத்தினர்.தூத்துக்குடி மாவட்டத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது. தென்மாவட்ட வெள்ள பாதிப்பை மத்தியக் குழு உடனே ஆய்வு செய்துள்ளது.சென்னை வானிலை மையம் அதிநவீனமானது. உரிய வானிலை முன்னெச்சரிக்கையை வழங்கியுள்ளது. அதிகனமழை எச்சரிக்கையை 12ம் தேதியே வழங்கியது.

ஒவ்வொரு 3 மணி நேரமும் மழை குறித்த எச்சரிக்கை வழங்கப்பட்டது.தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடர் என அறிவிக்க முடியாது.சென்னை மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ளம் ஆகியவற்றுக்கென தனியாக நிதியுதவி விடுவிக்கவில்லை. வழக்கமான பேரிடர் நிதிப்பங்கீடே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தேசிய பேரிடராக இதுவரை மத்திய அரசு அறிவித்ததே இல்லை; இனி அறிவிக்கவும் இயலாது. உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டபோதும் கூட தேசிய பேரிடர் என அறிவிக்கவில்லை; மாநில பேரிடராக அறிவிக்க நினைத்தால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும்,’என்றார்.

Related posts

பெற்றோரை திருமணமான அரசு ஊழியரின் காப்பீட்டு திட்டத்தில் குடும்ப உறுப்பினராக சேர்ப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கள்ளச்சாராயத்தை ஒழிக்க கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்: ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது