வெள்ள நிவாரணம் உடனடி தேவை, தாமதப்படுத்த முடியாது, நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெள்ள நிவாரண தொகை ரூ.6,000ஐ வங்கிக் கணக்கில் செலுத்த கோரி முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவரும், நிவாரணத் தொகையை அதிகரித்து வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் சட்டக்கல்லூரி மாணவர் செல்வகுமார் என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள். அதில், தமிழக அரசின் நிவாரண தொகை வழங்கக்கூடிய முடிவு பாராட்டக்கூடியது. டோக்கன் முறை மூலம் ரொக்கமாக வழங்கினால் தவறானவர்கள் பயனடைய கூடும் என மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று வழக்கு நீதிபதிகள் கங்கா பூர்வாலா, பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நான்கு மாவட்டங்களில் 37 லட்சம் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாகவும், வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி அமர்வு சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்க அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “வெள்ள நிவாரணம் என்பது உடனடி தேவை, அதை தாமதப்படுத்த முடியாது. தாமதப்படுத்துவது மக்கள் நலனுக்கு உகந்ததல்ல. மேலும், வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம் என்றும், நிவாரணம் என்பது உடனடி தேவை என்பதால் இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். நிவாரணம் தகுதியானவர்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அன்றைய தினம் நிவாரணம் வழங்கியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related posts

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹48 அதிகரிப்பு: தீபாவளி நேரத்தில் உயர்வால் வியாபாரிகள் அதிருப்தி

உபி கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பு

ரஷ்யா பீரங்கி தாக்குதலில் 7 பேர் பலி