மும்பையில் விமானம் மோதி 40 பிளமிங்கோ பறவைகள் பலி: பேரழிவு காத்திருக்கிறது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை

மும்பை: மும்பையில் விமானம் மோதி 40 பிளமிங்கோ பறவைகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் எமிரேட்ஸ் விமானம் தரையிறங்கும் போது பறவை கூட்டத்தின் மீது மோதியது. இதில், 40 பிளமிங்கோ பறவைகள் இறந்துள்ளன. விமான நிலையத்தை ஒட்டிய காட்கோபர் பகுதியில் இருந்து இறந்த 32 பிளமிங்கோ பறவைகள் மீட்கப்பட்டன. இறந்து கிடந்த சில பறவைகளை நாய்கள் கவ்விச் சென்றதால் அதன் மிச்ச பாகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாட் கனெக்ட் அறக்கட்டளை இயக்குநர் பி.என்.குமார் விடுத்துள்ள அறிக்கையில், ‘இந்த விபத்து குறித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் உரிய விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்துகிறோம். பறவை தாக்கி விமான பயணி யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தாலும் அது உலக அளவில் தலைப்பு செய்தியாகி இருக்கும்.

ஆனால் 40 பிளமிங்கோ பறவைகளின் இறப்பு நகர்ப்புற திட்டமிடும் அதிகாரிகளிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை’ என குறிப்பிட்டுள்ளார். இந்த பறவைகள் மும்பையிலிருந்து குஜராத்துக்கு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்கின்றனர் பறவை ஆர்வலர்கள். மேலும், மும்பையின் சதுப்பு நிலங்களை அழித்து நகர விரிவாக்க திட்டங்கள் செயல்படுத்துவதால் இதுபோன்ற விபத்துகள் நடக்கவிருக்கும் பேரழிவை சுட்டிக்காட்டுவதாக கூறி உள்ளனர்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா