நாளையுடன் மீன்பிடி தடைகாலம் நிறைவு: கடலுக்குச் செல்ல தயாராகும் மீனவர்கள்

மண்டபம்: தமிழகத்தில் நாளை இரவுடன் மீன்பிடி தடைகாலம் நிறைவு பெறும் நிலையில் மண்டபம் பகுதியில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். இதையொட்டி மீன்பிடி உபகரணங்களை படகுகளில் ஏற்றும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடை காலமாக மாநில அரசு அறிவித்து வருகிறது. இதன்படி, இந்தாண்டு கடந்த ஏப்.15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி நள்ளிரவு வரை மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மண்டபம் பகுதி உள்பட தமிழக கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தங்களது படகுகளை கடலோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.

இந்த நாட்களில் படகில் பொருத்தியுள்ள பலகைகளை சீரமைத்தல், என்ஜின்களில் தேய்மானம் அடைந்த உதிரி பாகங்களை நீக்கி பழுது பார்த்தல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். மீன்பிடி தடைகாலம் நாளை இரவுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்காக, மீன்பிடி வலைகள், மீன்களை சேகரித்து வைக்கும் குளிர்சாதனப் பெட்டிகள், மீன்கள் அதிகமாக இருக்கும் இடத்தை காண்பிக்கும் அதிநவீன கருவிகள், கடலில் படகுகளை ஓட்டிச் செல்வதற்கான வழிகாட்டும் ஜி.பி.எஸ் கருவிகள் உள்பட மீன்பிடி உபகரணங்களை தங்கள் படகுகளில் ஏற்றும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்குச் செல்லும் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருவதால், மண்டபம் கடற்கரை பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

Related posts

ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் பதவிக்கான வயது வரம்பு 75 ஆக உயர்வு

அமைச்சர் எ.வ.வேலு தகவல் 4 நகரங்களுக்கு இந்த ஆண்டில் புறவழிசாலை அமைக்கும் பணி

2 கி.மீ. தூரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டன; திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டம்: பக்தர்கள் அச்சம்