மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிகிறது கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்

*படகுகள் சீரமைப்பு பணி முடிந்தது

கடலூர் : மீன்பிடி தடை காலம் இன்றுடன் முடிவுக்கு வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயார் நிலையில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை விசை படகுகளில் சென்று ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 267 இயந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகுகளும், 3,763 இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டு படகுகளும் இந்த மீன்பிடி தடை காலத்தில் மீன்பிடிக்க செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த தடை காலத்தை பயன்படுத்தி, மீனவர்கள் தங்கள் படகுகளையும், வலைகளையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடலூர் துறைமுகத்தில் மீனவர்கள் தங்கள் வலைகளில் உள்ள கிழிந்த மற்றும் சேதம் அடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் படகுகளில் ஏற்பட்டிருந்த பழுதுகள் மற்றும் உதிரிபாகங்களை மாற்றும் பணியிலும் ஈடுபட்டனர். இதையடுத்து மீனவர்கள் தங்கள் படகுகளுக்கு வர்ணம் பூசி மீன் பிடிக்க செல்ல தயாராக உள்ளனர்.

இந்நிலையில் இன்றுடன் மீன்பிடி தடைகாலம் முடிவுக்கு வருவதால் கடலூர் துறைமுகம், பரங்கிப்பேட்டை, அன்னங்கோவில், தாழங்குடா, அய்யம்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளுடன் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்ல தயார் நிலையில் உள்ளனர்.

இதற்காக கேன்களில் டீசல் நிரப்பி வைத்துள்ளனர். மேலும் மீன் பிடிக்க செல்லும் தொழிலாளர்கள் சாப்பிடுவதற்காக, சமையல் செய்யும் பொருட்களையும் வாங்கி வைத்துள்ளனர். மேலும் மீன்களை பதப்படுத்தி வைக்கும் ஐஸ்கட்டிகளை படகுகளில் ஏற்றி தயார் நிலையில் வைத்துள்ளனர். இதையடுத்து தங்கள் படகுகளுக்கு படையலிட்டு, கடல் தேவதையை வணங்கி இன்று நள்ளிரவு மீன்பிடிக்க கடலுக்கு செல்வர்.

வானிலை எச்சரிக்கை விலகல்

கடலூர் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், வானிலை எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதால் கடலூர் மாவட்டத்திலுள்ள இயந்திரம் பொருத்திய மற்றும் பொருத்தப்படாத நாட்டு படகுகளுக்கு இன்று(14ம் தேதி) முதலும், விசைப்படகுகளுக்கு 15ம் தேதி முதலும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. உயிர்காப்பு உபகரணங்கள் மற்றும் தொலைதொடர்பு சாதனங்களை தவறாது உடன் எடுத்து சென்று பாதுகாப்பாக மீன்பிடிப்பு மேற்கொள்ள மீனவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் நிலை நீரோட்டத்தில் வானிலை எச்சரிக்கை காரணமாக காற்று அதிக அளவில் வீசியதால் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் மீண்டும் சீரான வானொலி அறிவிப்பு தொடர்ந்து கடலுக்கு சென்று மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்