இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 13 பேர் சென்னை வந்தனர்

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 13 மீனவர்கள் நேற்று சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்களை தமிழ்நாடு அரசு சார்பில் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு வாகனத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்கள் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 5 மீனவர்கள் என மொத்தம் 13 மீனவர்கள், கடந்த டிசம்பர் 6ம் தேதி, நெடுந்தீவு அருகே, கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர், அங்கு வந்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 13 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க கோரி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பிரதமருக்கு அவசர கடிதங்கள் எழுதினார். இதையடுத்து 13 மீனவர்களையும் கடந்த மாதம் 21ம் தேதி, இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்நிலையில் 13 மீனவர்கள், இலங்கையில் இருந்து நேற்று காலை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை வந்த 13 மீனவர்களையும் விமான நிலையத்தில், தமிழ்நாடு அரசு சார்பில், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பிறகு அதிகாரிகள், மீனவர்களை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Related posts

தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்ல முயன்ற 61 பேர் கைது

ராணுவம், தேசத்திற்கு எதிரான பதிவுகளை அனுமதிக்க இயலாது அனைத்து சமூக வலைத்தளத்துக்கும் விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்

தமிழ்நாடு முழுவதும் மமக போராட்டத்தால் பரபரப்பு பரனூர், துவாக்குடி சுங்கச்சாவடிகள் சூறை