மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறையின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது: எம்எல்ஏ வேல்முருகன்

கன்னியாகுமரி: மீனவர்களுக்கு, தமிழ்நாட்டின் மீனவ நலத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று எம்எல்ஏ வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூர் மண்டலத்தில் 8 மீனவ கிராமங்கள் உள்ளன. மீன் பிடிப்புத் தொழிலை நம்பி, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இரவி புத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 57 விசைப்படகுகளில், ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். மோசமான காலநிலை மாற்றத்தால், மீனவர்களின் விசைப்படகுகள், எல்லைத் தாண்டி பிரிட்டன் கடற்படை கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியா தீவு பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.

இதனால், பிரிட்டன் கடற்படையால் பிடிக்கப்பட்டு, பின்னர் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால், தமிழ்நாட்டின் மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை அதிகாரிகள், எல்லைத் தாண்டி சென்றதாக கூறி, மீனவ சகோதரர்களுக்கு தலா ரூ. 1 இலட்சம் முதல் 3.50 இலட்சம் வரை அபராதம் விதித்துள்ளனர்.

ஏற்கனவே, ஓகி புயல், கஜா புயல், கொரோனா உள்ளிட்ட பல்வேறு இடர் காலங்களில் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீனவர்களுக்கு, தமிழ்நாட்டின் மீனவ நலத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது வன்மையாக கண்டிக்கதக்கது. எனவே, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு, ஏழ்மையில் தவித்து வரும் மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை, ரத்து செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது