டன் கணக்கில் கிடைக்கும் மீன்கள்: கரை திரும்ப முடியாமல் தவிக்கும் கடலூர் மீனவர்கள்

கடலூர்: கடலில் தொடர்ந்து டன் கணக்கில் கிடைக்கும் மீன்களால் கரை திரும்ப முடியாமல் கடலூர் மீனவர்கள் தவித்து வருகின்றனர். கடலூர் தேவனாம்பட்டினத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு 2 நாட்களாக அதிக அளவில் மீன்கள் கிடைக்கின்றன. ‘பெரும்பாறை’ எனப்படும் பெரிய வகை மீன்கள் கிடைத்து வருகின்றன. கடலூர் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில் 200 டன் அளவிற்கு பெரும்பாறை மீன்கள் கிடைத்தன.

டன் கணக்கில் மீன்கள் கிடைத்ததில் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் மீன்களை கரைக்கு கொண்டு வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட சிறிய பைபர் படகுகள் கடலுக்கு வரவழைக்கப்பட்டு மீன்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ஒரு மீன் 8 கிலோ முதல் 80 கிலோ வரை எடையில் இருக்கும். அதிக அளவில் கிடைத்துள்ளதால் பெரும்பாறை மீன்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. சாதாரண நாட்களில் கிலோ ரூ.400 வரை விற்கப்படும் பெரும்பாறை மீன்கள் இன்று 100 ரூபாயாக குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து பெரும்பாறை மீன்களை வாங்கிச் செல்கின்றனர். வலைகளில் 10-15 டன் மீன்கள் கிடைப்பதே அரிதான நிலையில் நூற்றுக்கணக்கான டன் கிடைப்பதால் செய்வதறியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.

Related posts

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு: சீனர்கள் இருவர் உயிரிழப்பு!!

மெரினாவில் விமானப்படை சாகசத்தைக் காண வந்தவர்களில் உயிரிழந்த 5 பேருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி