முதலிரவில் புல்லட் பைக் கேட்டு அடம்பிடித்த மாப்பிள்ளை: 5 பேர் மீது வழக்கு

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் வடக்குத்தெரு அயனிவிளையை சேர்ந்தவர் சந்திரசேகர். அவரது மகள் ஸ்டெர்லின் (22). அவருக்கும், காட்டாத்துறையை சேர்ந்த ராஜ செல்வன் மகன் பிரவீன் சூர்யா (28) என்பவருக்கும் இடையே கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம்தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பு மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக ரூ.5 லட்சம் ரொக்கம், ஒரு புல்லட் பைக், ஒரு வீடு மற்றும் நிலம் ஆகியவற்றை கொடுப்பதாக பெண் வீட்டாரிடம் பேசி முடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.5 லட்சம் மாப்பிள்ளை வீட்டாரிடம் கொடுக்கப்பட்டது. மீதமுள்ளவை திருமணத்துக்கு பிறகு கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக ஸ்டெர்லின் குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் ஸ்டெர்லின் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ஸ்டெர்லின் கூறி இருப்பதாவது: திருமணம் நடந்து முதலிரவு அன்றே என் கணவர் பிரவீன் சூர்யா, எடுத்த எடுப்பிலேயே எனக்கு உனது வீட்டாரிடம் பேசி இப்பவே புல்லட் பைக் வாங்கிக்கொடு என அடம் பிடித்தார். இதையடுத்து ஒவ்வொரு நாளும் எனக்கு அது வேண்டும், இதுவேண்டும் உனது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் கேட்டு வாங்கி தா எனக்கூறி பிரவீன் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை கொடுமைப்படுத்தினர்.

மேலும் என் பெற்றோர் வசிக்கும் வீட்டை என் பெயரில் மாற்றி எழுதிக் கொண்டு வருமாறும் கேட்டு டார்ச்சர் செய்தனர். எனவே பிரவீன் சூர்யா, அவரது தந்தை ஜான்ராஜ செல்வன் (58), தாயார் கனகராணி (52), பிரவீன் சூர்யாவின் தம்பி பிபின் சூர்யா (20). அவரது மனைவி ஜெனி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் ஸ்டெர்லின் கூறியிருந்தார். இதன்பேரில் ஸ்டெர்லின் கணவர் பிரவீன் சூர்யா, அவரது தந்தை ஜான் ராஜ செல்வன், தாய் கனகராணி, பிபின் சூர்யா (20). அவரது மனைவி ஜெனி ஆகியோர் மீது நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு