முதல் தேர்தலிலேயே எம்எல்ஏ, தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்: விஜயகாந்தின் அரசியல் அசுர வளர்ச்சியும், பின்னடைவும்; விறுவிறுப்பான தகவல்கள்

சென்னை: விஜயகாந்த் கட்சி தொடங்கியதும் ஏற்பட்ட அரசியல் அசுர வளர்ச்சியும், பின்னடைவு ஏற்பட்டதற்கான காரணம் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜயகாந்த் 2005 செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) என்ற புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்டார். உடனடியாக தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி, தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். அடுத்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

இதில் 8.38 சதவீத வாக்குகளை தேமுதிக பெற்றது. “கருப்பு எம்.ஜி.ஆர்” என அழைக்கப்பட்ட அக்கட்சி தலைவரான விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார். தேமுதிகவின் மற்ற வேட்பாளர்களில் பலர் டெபாசிட்டை இழந்தனர். பாமகவின் கோட்டையாக கருதப்பட்ட விருத்தாசலத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் சட்டமன்றத்தில் நுழைந்தார். இதன் காரணமாக தேமுதிகவுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் நிரந்தரமாக முரசு சின்னம் ஒதுக்கப்பட்டது.

விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசத்தால் படித்த இளைஞர்களையும் புதிய வாக்காளர்களையும் அவரால் கவர முடிந்தது. அவருக்கென்று மகளிர் வாக்குகளும் கணிசமாக இருந்தன. பெரும்பாலும் அவரது கட்சியால் அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் பாதிப்படைந்தன என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில் 2009 நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அதிலும் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், பாண்டிச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 தொகுதியிலும் தேமுதிக தனித்தே போட்டியிட்டது. அந்த தேர்தலில் அவருக்கு 10.06 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதே நேரத்தில் விஜயகாந்த் தன்னை வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிரூபித்தார்.

2011 சட்டமன்றத் தேர்தல் வந்தது. வாக்கு வங்கியை பிரித்ததால் அதிமுக, தேமுதிகவை தன் பக்கம் இழுக்கும் படலத்தை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக பண்ருட்டியார், சுதீஷ் ஆகியோருடன் சென்று விஜயகாந்த் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணியை முடிவு செய்தார். இந்த தேர்தலில் 41 இடங்கள் தேமுதிகவிற்கு வழங்கப்பட்டன. 29 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சட்டசபையில் தேமுதிகவிற்கு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தும் விஜயகாந்துக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியும் கிடைத்தது.

தேர்தல் முடிந்த கையோடு தேமுதிக, அதிமுகவுடனான மோதல் போக்கு உருவானது. தொடர்ந்து இந்த மோதல் போக்கு விஸ்வரூபம் எடுத்தது. இரண்டு கட்சியினரும் தேர்தலில் யாரால் வெற்றி பெற முடிந்தது என்று ஒருவருக்கொருவர் கடுமையாக குற்றம் சாட்டி பேசத் தொடங்கினர். இதன் உச்சக்கட்டமாக சட்டமன்றத்தில் நாக்கைக் கடித்து விஜயகாந்த் பேசியது பெரும் அமளியானது. இதைத் தொடர்ந்து சட்டசபையில் அதிமுக, தேமுதிகவினர் கடுமையாக மோதிக் கொண்டனர். அத்துடன் இரண்டு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியும் முடிவுக்கு வந்தது. விஜயகாந்த் குடித்துவிட்டு சட்டமன்றத்துக்கு வருவதாக முதல்வர் ஜெயலலிதாவே பரபரப்பாக பேசினார்.

பதிலுக்கு அவரும் ஜெயலலிதா குறித்து பேசினார். கூட்டணி முறிந்ததை அடுத்து தேமுதிகவை உடைக்கும் படலத்தில் ஜெயலலிதா ஈடுபட தொடங்கினார். இதில் அதிமுகவுக்கு வெற்றி கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு முக்கிய பிரமுகர்கள் அதிமுக பக்கம் தாவ தொடங்கினர். இதனால், விஜயகாந்த் கடும் அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து தேமுதிக உடைய தொடங்கியது. சட்டசபையில் தேமுதிக எம்எல்ஏக்கள் 8 தனி அணியாகச் செயல்பட ஆரம்பித்தனர். தொடர்ந்து அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.

அதன் பிறகு 8 எம்எல்ஏக்களும் சட்டசபையில் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களாக செயல்பட தொடங்கினர். மூத்த தலைவரான பண்ருட்டியாரும் கூடாரத்தைக் காலி செய்துவிட்டு, எம்எல்ஏ பதவியை விட்டு விலகி 2013ல் அதிமுகவுக்கு தாவினார். 2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக பாஜக மற்றும் மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்தது. எந்த இடத்திலும் வெல்ல முடியவில்லை. பிரசாரத்துக்கு வந்திருந்த மோடி, என் நண்பர் விஜயகாந்த் என்று குறிப்பிட்டுப் பேசி இருந்தார். அவரது பதவி ஏற்பு விழாவுக்கு டெல்லி சென்றிருந்த விஜயகாந்த், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அவருக்கு கண்ணில் தொடர்ந்து நீர் வடியும் பிரச்னை தலை தூக்கி இருந்தது.

டெல்லியில் அவரை ஒரு நிருபர் ஏடாகூடமாக கேள்வி கேட்க, ‘ தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க..’’ என்று அவர் கூறினார். இதனால் மீடியாக்களுடன் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. 2016 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேமுதிகவில் பலரும் வலியுறுத்தினர். அவரோ மூன்றாவது அணியான மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி சேர்ந்தார். உடனே அவரது இரு எம்எல்ஏக்கள் விலகி திமுகவில் சேர்ந்தனர். 10 மாவட்டச் செயலாளர்கள் விலகினர். தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியை மக்கள் ஏற்கவே இல்லை. அந்த தேர்தலில் அந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. விஜயகாந்த், தான் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட்டார். மூன்றாவது இடம் தான் அவருக்கு கிடைத்தது. அது மட்டுமல்லாமல் டெபாசிட்டையும் பறிகொடுத்தார்.

தேமுதிகவும் சின்னாபின்னாமாக தொடங்கியது. அடுத்து நடைபெற்ற தேர்தலில் தேமுதிக படுதோல்வியை சந்திக்க நேரிட்டது. ஆரம்பத்தில் விஜயகாந்துடன் இருந்தவர்கள் அனைவரும் பிரிந்து சென்று விட்டனர். தேமுதிக வாக்கு வங்கியும் குறைய தொடங்கியது. இந்த நிலையில் விஜயகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வப்போது வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார் விஜயகாந்த். மேலும் சென்னையில் உள்ள மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவரால் முழுமையாக அரசியலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து அவரது மனைவி பிரேமலதா கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கினார். அவ்வப்போது விஜயகாந்த் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் அவரால் பேசமுடியவில்லை. குரல் பிரச்னை வேறு இருந்து வந்தது. கடைசியாக கடந்த 2 வாரத்திற்கு முன்பு தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் விஜயகாந்த் கலந்து கொண்டார். அவரது நிலையை பார்த்து கட்சி தொண்டர்கள் கண்ணீர் வடித்தனர். கேப்டனுக்கா இந்த நிலைமை என்று அவர்களுக்குள் ஒருவித கவலை ஏற்பட்டது. அந்த கூட்டத்தில் விஜயகாந்திடம் இருந்த தேமுதிக பொது செயலாளர் பதவி பிரேமலதாவுக்கு வழங்கப்பட்டது. விஜயகாந்த்திடம் தலைவர் பதவி மட்டும்தான் இருந்தது. பொதுக்குழு, செயற்குழுவுக்கு பிறகு விஜயகாந்த் பெயரில் வந்த அறிக்கைகள் அனைத்தும் பிரேமலதா பெயரில் வரத்தொடங்கியது. பிரேமலதா களத்தில் இறங்கி கட்சி பணியாற்ற தொடங்கினார். இந்த நிலையில் தான் தேமுகவினரால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் நேற்று காலை காலமானார்.

* 2 முறை எம்எல்ஏவான விஜயகாந்த்
தேமுதிக ஆரம்பிக்கப்பட்டதும் முதல் முறையாக 2006ல் நடைபெற்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் தேமுதிக 8.38 சதவீதம் வாக்குகள் பெற்றது. மொத்தம் 27.64 லட்சம் வாக்குகள் வாங்கியது. இதில் விருத்தாசலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். அவர் 61,337 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு 2வது முறையாக வெற்றி பெற்றார். இதில் அவர் 91,164 வாக்குகள் பெற்றார். ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி ெபற்றதன் மூலம் அவர் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவரானார். ஆனால் கூட்டணியில் நின்றதால் அவரது வாக்கு வாங்கி 7.9 சதவீதமாக குறைந்தது. அதன் பிறகு விஜயகாந்த் 2016ல் நடைபெற்ற தேர்தலில் உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். அவர் வெறும் 34,447 வாக்குகள் மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை