முதல் எப்ஐஆர்

இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவை ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டவை. இந்த சட்டங்கள் காலமாற்றத்துக்கு ஏற்ற வகையில் இல்லை எனக்கூறி ஒன்றிய அரசு, அவற்றுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷியா ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதில் குற்றவியல் தொடர்பான மூன்று புதிய சட்டங்களை அமல்படுத்துவதற்கு முன்பு, மாநில அரசுகளின் கருத்துகளை பெற வேண்டும். அதுவரை புதிய சட்டங்களை நிறுத்திவைக்க வேண்டும் என்றார். அதேபோல பல்வேறு மாநில முதல்வர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இருந்தனர். புதிய சட்டங்கள் குறித்து ஆலோசனைகளோ, கருத்துகளோ கேட்கப்படாமல், அவசர கதியில் உருவாக்கப்பட்டிருக்கின்றன என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இதற்கு முன்பு, சட்டங்களில் திருத்தங்களைத்தான் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், இப்போது சட்டங்களையே மாற்றுகிறார்கள். அதே நேரத்தில், புதிய சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர்களை வைத்திருக்கிறார்கள். இதுவரை சட்டங்களின் பெயர்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கின்றன. அந்தந்த மாநிலங்களில் மக்களின் வசதிக்காக மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்து கொள்ளப்படுவது நடைமுறையாக இருந்து வருகிறது. ஒன்றிய அரசால் நிறைவேற்றப்படும் எந்தவொரு மசோதாவும், சட்டங்களும் ஆங்கில மொழியில்தான் இருக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 348 சொல்கிறது.

பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் இருக்கும் இந்தியாவில், சமஸ்கிருதம் அல்லது இந்தி என்று குறிப்பிட்ட ஒரு மொழியில் சட்டங்களைக் கொண்டு வருவது ஏற்புடையது அல்ல. அது அனைத்து மக்களின் உரிமைக்கு எதிரானது.
தற்போது இருக்கும் சட்டங்களின் பிரிவுகளை நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் காலங்காலமாகக் கையாண்டு வருகிறார்கள். பெரும்பாலான சட்டப்பிரிவுகள் அவர்களுக்கு மனப்பாடமாக இருக்கும். இப்போது, புதிய சட்டங்களால் பெரும் குழப்பத்துக்கு ஆளாவார்கள். எப்.ஐ.ஆர் பதிவு செய்வதிலிருந்து பிரச்னைகள் தொடங்கும். நீதி வழங்குவதில் பெரும் தாமதம் ஏற்படும் என சில நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சட்டம் அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கக்கோரி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நேற்று முதல் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதில் மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகிறது. இதற்கிடையில் புதிய குற்றவியல் சட்டங்களின்படி டெல்லியில் தெருவோர வியாபாரி மீது முதல் எப்ஐஆர் போடப்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக தெருவோர வியாபாரி மீது பாரதிய நியாய சன்ஹிதா 2023 சட்டப்படி டெல்லி போலீசார் வழக்குப் பதிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்

டி20 ஆல்ரவுண்டர் தரவரிசை; ஹர்திக் பாண்டியா நம்பர் 1: முதல் இந்திய வீரராக சாதனை

பிரசந்தா பதவி விலக வேண்டும்; நேபாளி காங்கிரஸ் கோரிக்கை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பிரதமர் முடிவு?