ராகுல் நீதி யாத்திரை அசாமில் தங்க முதலில் அனுமதி, பின்னர் மறுப்பு: பாஜ அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

கவுகாத்தி: ராகுலின் நீதி யாத்திரையின் போது அசாமில் 2 மாவட்டங்களில் உள்ள பொது மைதானங்களில் இரவு தங்குவதற்கு அம்மாநில அரசு அனுமதி மறுப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை யாத்திரையின் வெற்றியைத் தொடர்ந்து, நாளை மறுநாள் முதல் பாரத் ஜோடோ நீதி யாத்திரையை சமீபத்தில் வன்முறைக்குள்ளான வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இருந்து தொடங்கி மார்ச் 20ம் தேதி மும்பையில் முடிக்க உள்ளார்.

இதன் போது, 66 நாட்களில் 110 மாவட்டங்களில் உள்ள 100 மக்களவை மற்றும் 337 சட்டப்பேரவை தொகுதியில் உள்ள மக்களை ராகுல் சந்திக்க உள்ளார். இந்த யாத்திரைக்கு முதலில் மணிப்பூர் மாநில அரசு அனுமதி மறுத்ததற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நீதி யாத்திரை அசாம் மாநிலத்தை கடக்கும் போது ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் தேமாஜி மாவட்டத்தின் கோகாமுக் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் ஜோர்கத் மாவட்டத்தில் உள்ள கல்லூரி விளையாட்டு மைதானங்களில் தங்க அனுமதி கோரப்பட்டு முதலில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

தற்போது, கடைசி நேரத்தில் இதற்கான அனுமதி வழங்க அசாம் மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில், அசாம் மாநில சட்டேபரவை எதிர்க்கட்சி தலைவரான தேபப்ரதா சகியா கூறுகையில், ‘இதுவொரு அரசியல் பேரணி அல்ல. ஆன்லைனில் அனுமதி கோரி விண்ணப்பித்ததால், மற்ற மாவட்டங்களில் என்ன நிலை என்பது பற்றி தெரியவில்லை.

அனுமதி மறுத்திருப்பதன் மூலம் ஜனநாயக முறையில் காங்கிரஸ் பேரணி நடத்த பாஜ மறுத்துள்ளது. தனிநபருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆதரவு கோரி வருகிறோம். தற்போது ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தேசியத் தலைவர்கள் தங்குவதற்கு மற்றும் வாகனங்களை நிறுத்த இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,’’ என்று இடத்தின் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்தார்.

* காங்கிரஸ் உறுதி
அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் ஹரிஷ் சங்கர் குப்தா, ‘’அருணாச்சலில் நீதி யாத்திரைக்கு அனுமதிக்க கோரி மாநில அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. யாத்திரைக்கு இடையூறு விளைவிக்க அழுத்தம் கொடுக்கும் ஒன்றிய அரசின் உத்திகள் காங்கிரசிடம் பலிக்காது. அருணாச்சலில் நீதி யாத்திரையை எப்படியும் நடத்த வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது,’’ என்று கூறினார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு