முதல் கோணல்

நாடு முழுவதும் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடந்தது. கடந்த 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆட்சியமைக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜ 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 293 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மையை பெற்றது. கடந்த 7ம் தேதி தலைநகர் டெல்லியில் நடந்த என்டிஏ எம்பிக்கள் கூட்டத்தில் அந்த கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய தினமே குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த அவர் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக்கொண்ட அவர், ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார்.

அதன்படி குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் புதிய அரசு பதவியேற்பு விழா நடந்தது. பிரதமர் மோடிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து 30 கேபினட் அமைச்சர்கள், தனி பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர், 36 இணை அமைச்சர்கள் அடுத்தடுத்து பொறுப்பேற்றனர். பின்னர் மோடி, பாஜ மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய அரசின் முதல் 100 நாட்கள் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஒன்றிய அரசில் அனுமதிக்கப்பட்ட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 81. தற்போது பிரதமருடன் சேர்த்து 72 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இன்னும் 9 அமைச்சர்கள் வரை பதவியேற்க முடியும். இந்நிலையில் என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் மகாராஷ்டிரா மாநில கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) புதிய அமைச்சரவையில் தங்களுக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பு வேண்டும். இணை அமைச்சராக பதவியேற்றுக் கொள்வது சரியாக இருக்காது எனக்கூறி பதவியேற்பு விழாவை புறக்கணித்துள்ளது.

மற்றொரு கூட்டணி கட்சியான சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கட்சிக்கு 7 எம்பிக்கள் இருந்தும் ஒரே ஒரு இணை அமைச்சர் பதவி பாஜ வழங்கியது அநீதி என அக்கட்சி ரங் பார்னே எம்.பி. கூறியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் நடிக்க விரும்புவதால் அமைச்சர் பதவி வேண்டாம் எனக் கூறினேன். ஆனால் பாஜ தலைமை கேட்டுக்கொண்டதால் மறுக்கவில்லை. ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து என்னை விடுவிப்பார்கள் என நம்புகிறேன் என ஒன்றிய இணை அமைச்சராக பதவியேற்ற பின் நடிகர் சுரேஷ் கோபி எம்.பி. பேட்டியில் கூறினார்.

பின்னர், பாஜ தலைமை அழுத்தத்தின் காரணமாக நான் ராஜினாமா செய்யப்போவதாக வெளியான தகவல் தவறானது. ஒன்றிய இணை அமைச்சராக தொடருவேன் என பல்டி அடித்தார். இதுபோன்று புதுவையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜ கூட்டணி ஆட்சியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 3வது முறையாக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியை முதல்வர் ரங்கசாமி புறக்கணித்துள்ளார். அமைச்சரவை பதவியேற்று 24 மணி நேரம் கடந்தும் யார் யாருக்கு எந்தெந்த இலாகா என்ற விவரம் அறிவிக்கப்படாமல் இருந்தது. பின்னர் நேற்றிரவு 7.45 மணிக்கு தான் அமைச்சர்களின் இலாகா பட்டியல் வெளியானது. கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் முக்கிய துறைகளை கேட்டதுதான் இந்த தாமதத்துக்கு காரணம். பாஜ கூட்டணியில் குழப்பமும், சலசலப்பும் தொடர்வதால் தொடக்கமே கோணலாக அமைந்துவிட்டது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி