முதல் பட்டியல் வெளியான அடுத்த நாளே மே. வங்கம் அசன்சால் தொகுதி பாஜ வேட்பாளர் திடீர் விலகல்: திரிணாமுல் காங்கிரஸ் கிண்டல்

கொல்கத்தா: மக்களவை தேர்தலுக்கான பாஜ முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே, மேற்கு வங்க மாநிலம் அசன்சால் தொகுதி வேட்பாளரான நடிகர் பவன் சிங் விலகுவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் 16 மாநிலங்களில் 195 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜ கட்சி நேற்று வெளியிட்டது. இதில், மேற்கு வங்க மாநிலம் அசன்சால் தொகுதியில் போஜ்புரி நடிகரும், பாடகருமான பவன் சிங் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இத்தொகுதியில், 2014 மற்றும் 2019ல் பாஜ சார்பில் போட்டியிட்டு வென்ற பாடகர் பபுல் சுப்ரியோ, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவியதால் கடந்த 2022ல் இடைத்தேர்தல் நடந்தது. அதில், திரிணாமுல் சார்பில் போட்டியிட்ட நடிகர் சத்ருகன் சின்கா, பாஜ வேட்பாளரை தோற்கடித்து அசன்சால் தொகுதி எம்பி ஆனார். இதனால், சத்ருகன் சின்காவுக்கு போட்டியாக இருக்க வேண்டுமென்பதற்காக 38 வயதான பிரபல நடிகர் பவன் சிங்கை பாஜ தேர்வு செய்தது. இருவரும் பீகாரை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்நிலையில், வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட அடுத்த நாளே பவன் சிங் தன்னால் போட்டியிட முடியாது என நேற்று அறிவித்தார். அவர் தனது டிவிட்டரில், ‘‘என்னை நம்பி அசன்சால் வேட்பாளராக தேர்வு செய்ததற்காக பாஜ தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், சில காரணங்களால் என்னால் தேர்தலில் போட்டியிட முடியாது’’ என கூறி உள்ளார்.
இதை மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கிண்டல் செய்துள்ளனர். பவன் சிங் தனது பாடல்களில் மேற்கு வங்க மாநில பெண்களை கொச்சைப்படுத்தியதாக ஏற்கனவே கடும் எதிர்ப்புக்கு ஆளானார். அவரை வேட்பாளராக அறிவித்தது மேற்கு வங்க பெண்களை அவமதிக்கும் செயல் என திரிணாமுல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். இதன் விளைவாக பாஜ மேலிட உத்தரவின் பேரில் பவன் சிங் விலகுவதாக அறிவித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாந்தனு சென் கூறுகையில், ‘‘பெண்கள் அதிகாரம் பற்றி பாஜ பேசுகிறது. ஆனால் உண்மையில் அவர்கள் பெண்களுக்கு எதிரானவர்கள். மேற்கு வங்கத்திற்கு எதிரானவர்கள். தற்போது மக்களின் கோபத்தை உணர்ந்து அவர்கள் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது’’ என கூறி உள்ளார்.

Related posts

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி