முதல் தலைமுறை தொழில் முனைவோர் 16 நபர்களுக்கு சேவை, உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்க வங்கிக்கடன் வழங்க ₹152 லட்சம் மானிய நிதி

*கலெக்டர் சந்திரகலா தகவல்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா `நிறைந்தது மனம்’ திட்டம் மூலமாக ஆற்காடு தாலுகா முள்ளுவாடி அருகே கரிக்கந்தாங்கள் அருந்ததியர் காலனியை சேர்ந்த அம்சவேணி பாலசுப்பிரமணியன் என்கிற கரும்பு விவசாயி மாவட்ட தொழில் மையத்தின் மூலம் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் ரூ.1.32கோடி மதிப்பீட்டிலான கடனுதவியில் அரசு மானியம் 35 சதவீதம் ரூ.46.38லட்சம் பெற்று புதிய கரும்பு அறுவடை இயந்திரம் வாங்கி விவசாயிகளுக்கு வாடகைக்கு விட்டு கரும்பு அறுவடை செய்து பயனடைந்து வருவதை நேரடியாக சென்று பார்வையிட்டு, மற்ற பொதுமக்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையும் வகையில் தொழில் குறித்து கேட்டறிந்தார்.

அதேபோல், ஆற்காடு நகராட்சி வேலூர்- சென்னை பைபாஸ் சாலை அருகே பொறியியல் பட்டதாரியான ஸ்ரீராஜ் தமிழ்நாடு அரசின் நீட்ஸ் திட்டத்தின் மூலம் மாவட்ட தொழில் மையத்தில் இருந்து கார் சர்வீஸ் சென்டர் ஆரம்பிக்க ரூ.32.52 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி பெற்று, அதில் 25 சதவீதம் அரசு மானியம் ரூ.8.13 லட்சம் பெற்று கார் சர்வீஸ் சென்டர் தொழில் தொழில் செய்து வருவதை அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமாக கலெக்டர் ஆய்வு செய்தார்.

பின்னர், இந்த திட்டம் குறித்து கலெக்டர் சந்திரகலா நிருபர்களிடம் கூறியதாவது:தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசு எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவுத் தொழில் முனைவோர்க்கென பிரத்யேக சிறப்புத் திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தினை, அறிமுகப்படுத்தியுள்ளது. நடப்பாண்டு 2024- 2025ல் 21 நபர்களுக்கு வங்கிகள் மூலமாக கடன் வழங்க மானிய நிதி ஒதுக்கீடு ரூ.240.57 லட்சங்கள் இலக்கீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு 2023-2024ல் 37 நபர்களுக்கு ரூ.403.36 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வட்டி மானியம் 9 நபர்களுக்கு ரூ.10.71 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு 2024-2025ல் 19 நபர்களுக்கு ரூ.143.91 லட்சம் மானிய மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வட்டி மானியம் 7 நபர்களுக்கு ரூ.21.78 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

படித்த, சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள, முதல் தலைமுறைத் தொழில் முனைவோரின் தொடக்க முன்னெடுப்புகளை ஆதரித்து, நெறிப்படுத்தி, ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தினை (நீட்ஸ்) 2012-13 முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த திட்டத் தொகை ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.500 லட்சத்தை மிகாமலும் உள்ள தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி ஏற்பாடு செய்யப்படுகிறது.

திட்டத் தொகையில் 25% மானியம், பட்டியல் வகுப்பு, பட்டியல் பழங்குடி இனம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் மானியமாக திட்டத் தொகையில் 10% மானியம் வழங்கப்படுகிறது. மானிய உச்சவரம்பு ரூ.75 லட்சம் மேலும் கடனை திரும்பச் செலுத்தும் காலம் முழுமைக்கும் 3% வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.நடப்பாண்டு 2024-2025 முதல் தலைமுறை தொழில் முனைவோர், 16 நபர்களுக்கு சேவை மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்க வங்கிகள் மூலமாக கடன் வழங்க மானிய நிதி ஒதுக்கீடு ரூ.152.00 லட்சங்கள் இலக்கீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு 2023-2024ல் 16 நபர்களுக்கு ரூ.103.72 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வட்டி மானியம் 14 நபர்களுக்கு ரூ.31.03 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு 2024-2025ல் 9 நபர்களுக்கு ₹108.90 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வட்டி மானியம் 6 நபர்களுக்கு ரூ.7.67 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களின் மூலம் படித்த இளைஞர்கள், பொதுமக்கள் மானியத்துடன் கூடிய கடனுதவிகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு கலெக்டர் கூறினார்.அப்போது மாவட்ட தொழில்மைய மேலாளர் ஆனந்தன், உதவி இயக்குனர் கோமதி, தாசில்தார் பாக்கியலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

கரூர் மாவட்ட அரசு ஹாஜி நியமனம் ரத்து செய்தது ஐகோர்ட் மதுரை கிளை

சேலம் அருகே பூ வியாபாரி வீட்டில் ரூ.15 லட்சம் கொள்ளை

மகாராஜா, கொட்டுக்காளி உள்ளிட்ட 6 தமிழ் படங்கள் இந்தியா சார்பில் 2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை!!