உயிருக்கு பயந்தோடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியவில்லை: தூத்துக்குடி சம்பவம் குறித்து உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: தூத்துக்குடியில் உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியவில்லை என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து, சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிப்பது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மூன்று மாத அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும். அந்த சொத்துகளை வாங்குவதற்கான வருவாய் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரிக்க வேண்டியுள்ளதால் அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது. இதுபோல், இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதற்காகவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளோம். என்று கூறி விசாரணையை மூன்று மாதங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்