பட்டாசு வெடித்து தீ; இருவர் சாவு: 4 பேர் படுகாயம்

தூத்துக்குடி: பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே குறிப்பன்குளம் பகுதியில் தனியார் பட்டாசு ஆலை உள்ளது. இதனை நாசரேத் அருகே திருமறையூரைச் சேர்ந்த ராம்குமார் 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இங்கு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாலை 5 மணி அளவில் பட்டாசுகள் ஒன்றோடு ஒன்று உரசியதில் தீப்பிடித்து குடோன் முழுவதும் பரவியது. இதையடுத்து அந்த அறையில் இருந்த 5பேரில் ஒருவர் தப்பியோடிவிட்டார். பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட ஸ்ரீவைகுண்டம் அருகே அரசகுளத்தைச் சேர்ந்த முத்துகண்ணன்(21), கந்தசாமிபுரத்தைச் சேர்ந்த விஜய்(25) ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர்.

தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்து படுகாயம் அடைந்த ஸ்ரீவைகுண்டம் அருகே புளியங்குளத்தைச் சேர்ந்த செல்வம் (21), ஆழ்வார்திருநகரி அருகே செம்பூரைச் சேர்ந்த பிரசாத்(20), சின்னமதிகூடலை சேர்ந்த பெண்கள் செந்தூர்கனி(45), முத்துமாரி(41) ஆகியோரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து நாசரேத் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

Related posts

மதுரை மண்டலத்திற்கு தேவையான அறிவியல் பரிசோதனை நிபுணர்களை உடனே நியமிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா மூத்த தளபதி பலி

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி