பட்டாசு வெடித்த சிறுமி சாவு: ரூ.3 லட்சம் முதல்வர் நிதி உதவி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி அஸ்வினி. மகள் நவிஷ்கா(4). தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். தீபாவளி பண்டிகை அன்று மாலை சிறுமி நவிஷ்கா வீட்டின் அருகே பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தாள். பெரியப்பாவான கூலித்தொழிலாளி விக்னேஷ்(28), அவளது கையை பிடித்து பட்டாசு வெடித்ததாக தெரிகிறது. பட்டாசு ெவடிக்கும்போது, விக்னேஷ் இடது கையில் பட்டாசுகளை வைத்திருந்தார். அந்த பட்டாசுகளில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றி வெடித்து சிதறியது. இதில் சிறுமியின் உடல் முழுவதும் பட்டாசு சிதறி தீக்காயம் அடைந்து அங்கேயே பரிதாபமாக இறந்தாள்.

விக்னேஷின் இடது கையில் 4 விரல்கள் துண்டானது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளியன்று பட்டாசு வெடித்தபோது விபத்தில் சிறுமி நவிஷ்கா (வயது 4) உயிரிழந்த துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்த விக்னேஷ் என்பவருக்கு ரூ.1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது