மூணாறில் தீ விபத்து; 10 வீடுகள் எரிந்து நாசம்: தீயணைப்பு வீரர்கள் போராடி அணைப்பு

மூணாறு: மூணாறு அருகே நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 வீடுகள் எரிந்து சேதமாகின. கேரள மாநிலம், மூணாறிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள நெற்றிக்குடி எஸ்டேட் சென்ட்ரல் டிவிஷன் பகுதியில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு தொழிலாளர்கள் வசிக்கும் 11 வரிசை வீடுகளைக் கொண்ட லயன்ஸ் குடியிருப்பில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் ஒரு வீட்டில் தீப்பற்றியது. அப்போது, புகை மண்டலம் ஏற்பட்டதை உணர்ந்த சிலர் சுதாரித்துக் கொண்டு அருகில் வசிப்பவர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றினர். தீப்பிடித்த வீட்டில் தீயை அணைக்க தொழிலாளர்கள் முயன்றனர். ஆனால் அதற்குள் அடுத்தடுத்த வீடுகளுக்கும் மளமளவென தீ பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

உடனடியாக மூணாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் மலைச் சாலையில் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு தாமதமானது. அதற்குள் 10 வீடுகளும் முழுவதுமாக தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதனால் வீட்டில் இருந்த பணம், முக்கிய பொருட்கள், ஆவணங்கள் எதையும் எடுக்க முடியாமல் தொழிலாளர்கள் குடும்பத்தினர் பரிதவித்தனர்.பின்னர் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு