‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்; செட்டிகுளம் குன்றின் அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் நேரில் ஆய்வு செய்த கலெக்டர் அதிரடி உத்தரவு

பாடாலூர்: பெரம்பலூர் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் இன்று நடந்த உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டு, அரசு பள்ளி 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். பள்ளி கழிவறையில் தண்ணீர் வராததால் நீரேற்றும் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்துக்கே வரும் ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், ஒவ்வொரு மாதமும் 3வது புதன்கிழமை வட்ட அளவில் 24 மணி நேரம் தங்கி கள ஆய்வில் ஈடுபடுவார்கள் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம், ஆலத்தூர் ஒன்றியம் செட்டிகுளம் ஊராட்சியில் நேற்று தங்கி ஆய்வு மேற்கொண்டார். முதல் நிகழ்ச்சியாக செட்டிகுளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், உடனடியாக தீர்வுகாணக்கூடிய மனுக்களின் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், துறைசார்ந்து வழங்கப்பட்டுள்ள அனைத்து மனுக்களின் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை சம்மந்தப்பட்ட துறை அலுவலரக்ள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

பின்னர் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம்குறித்து ஆய்வு செய்த கலெக்டர், மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகளை பார்வையிட்டார். அப்போது கழிவறைகளில் தண்ணீர் வராததை அறிந்த அவர், அப்பள்ளியில் பணியாற்றும் தண்ணீரேற்றும் நிலை அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும், பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். கட்டிட கழிவுகளை பள்ளி வளாகத்திற்குள் போடாமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். பள்ளியைச் சுற்றியுள்ள கழிவுநீர் வாய்க்கால்களை முறையாக கால இடைவெளியில் தூய்மை செய்திட வேண்டும் என்று பள்ளி தலைமையாசிரியருக்கும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் உத்தரவிட்டார். பின்னர் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய கலெக்டர், பாடப்புத்தகங்களில் உள்ள பாடங்களை படிக்கச்சொல்லி அவர்களின் உச்சரிப்பு, வாசிக்கும் திறன் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர், குழந்தைகள் மையத்தை பார்வையிட்ட கலெக்டர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்தான உணவுப்பொருட்கள் போதிய அளவில் இருப்பு உள்ளதா, முறையாக அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறதா, குழந்தைகளின் உயரம், எடை போன்றவை கண்காணிக்கப்படுகிறதா, அதற்கான பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதாக என்பது குறித்து பார்வயிட்டார். அதனைத்தொடர்ந்து அங்குள்ள நியாயவிலைக் கடைக்குச்சென்ற அவர், அந்த கடைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பஅட்டைதாரர்களுக்கு ஏற்ப உணவுப்பொருட்கள் இருப்பில் உள்ளதா என்று பார்வையிட்டார். உணவுப்பொருட்களை வாங்க வந்திருந்த பொதுமக்களிடம் அனைத்து பொருட்களும் முறையாக வழங்கப்படுகிறதா, ஏதேனும் குறைகள் உள்ளதா என்று கேட்டறிந்தார்.

பின்னர் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற கலெக்டர், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் குறித்தும், அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள விதம் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி, அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஊராட்சிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும், குப்பைகளை தினந்தோறும் அப்புறப்படுத்த வேண்டும், கழிவுநீர் வாய்க்கால்களில் தண்ணீர் தேங்காவண்ணம் முறையாக அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மாலை செட்டிகுளம் குன்று பகுதியில் அரசின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அப்பகுதிக்குச்சென்று பார்வையிட்டார். குன்றின் அடிவாரத்தில் அரசின் நிலம் சில தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்த மாவட்ட கலெக்டர் நிலவரைபடத்தை வைத்து அரசின் நிலத்தை உடனியாக மீட்டெடுக்க வேண்டும் என்று தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.

மீட்டெடுக்கும் நிலத்தில் மக்கள் பயன்படும் வகையில் குளம் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து செட்டிகுளம் அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் நல விடுதி மற்றும் அரசினர் மாணவியர் விடுதிகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சாப்பிட்டுப்பார்த்து ஆய்வு செய்தார். விடுதியில் உள்ள கழிவறைகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்தும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுப்பொருட்கள் தேவையான அளவு உள்ளதா என்றும், வழங்கப்பட்ட உணவுப்பொருட்கள் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்றும் அதற்கான பதிவேடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள். ”அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். படிப்பு ஒன்றுதான் நம்மை இந்த சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக உயர்த்தும். நீங்கள் என்னவாக நினைக்கின்றீர்களோ அந்த இலக்கை நோக்கி விடா முயற்சியுடன் படியுங்கள். நானும் உங்களைப்போல அரசுப்பள்ளியில் படித்துததான் இன்று ஆட்சியராகி உள்ளேன். உங்கள் இலட்சியத்தை அடைய கல்வி ஒன்றுதான் உதவும். எனவே, அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். உங்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்கின்றது. அதனை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.” என்றார். அதனைத்தொடர்ந்து இரவு 8.00 மணிக்கு செட்டிகுளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்த கலெக்டர் அங்கிருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு, எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரமேஷ், பெரம்பலூர் சார் ஆட்சியர் கோகுல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வைத்தியநாதன், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், பிரேமலதா, ஆலத்தூர் தாசில்தார் சத்தியமூர்த்தி, செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கலாதங்கராசு உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது