கடன் ெதாகையை திருப்பி கேட்டு நிதி நிறுவனங்கள் அழுத்தம் 2 மகள்களை தூக்கில் ெதாங்கவிட்ட தந்தை தூக்கம் தெளிந்து போராடி காப்பாற்றிய தாய்: தப்பி ஓடியவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

ராணிப்பேட்டை: கடன் தொகையை திருப்பி கேட்டு நிதி நிறுவனங்கள் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக, அதிகாலையில் 2 மகள்களை தந்தை தூக்கில் தொங்கவிட்டார். அவர்களை தாய் போராடி மீட்டார். இதனால் தந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ராணிப்பேட்டை அடுத்த கீழ்வேலம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜு(45), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி இந்திரா(41). இவர்களுக்கு 22 வயது, 17 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இந்திரா தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து நின்றுவிட்டார்.இந்நிலையில் ராஜு, குடும்ப தேவைகளுக்காக சோளிங்கரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.3.50 லட்சம் கடன் பெற்றாராம். மேலும் சில நிதி நிறுவனங்களில் ரூ.2 லட்சம் வரை கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சில மாதங்களாக போதிய வருமானம் கிடைக்காமல், கடனுக்கான தவணை மற்றும் வட்டியை செலுத்த முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
அதேசமயம் கடன் தொகையை செலுத்தும்படி நிதி நிறுவனங்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இதில் மன உளைச்சலில் இருந்த ராஜு, தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என மனைவி இந்திராவிடம் கூறி உள்ளார். அதை அவர் ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அனைவரும் தூங்கிய நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் 2 மகள்களையும் எழுப்பிய ராஜு தனது நிலைமையை கூறி அழுதபடி தற்கொலை செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இதற்காக முன்கூட்டியே மின்விசிறி கொக்கியில் புடவையை கட்டி வைத்திருந்தார். தந்தை அழுதபடி கூறியதை கேட்டு வேறு வழியின்றி 2 மகள்களும் நாற்காலி மீது ஏறி நின்றுள்ளனர். பின்னர் மகள்கள் கழுத்தில் புடவையை மாட்டினார். திடீரென கண்விழித்த இந்திரா, அலறியடித்து ஓடிவந்து மகள்களை மீட்க போராடினார். ஆனால் ராஜு நாற்காலியை இழுத்துவிட்டார்.

இதில் மகள்கள் தூக்கில் சிக்கி உயிருக்கு போராடினர். அவர்களை தாங்கி பிடித்துக்கொண்டு, இந்திரா அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டில் உள்ள ராஜுவின் தம்பி முத்து ஓடி வந்து அரிவாளால் புடவையை அறுத்து 2 மகள்களையும் மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மகள்களை தூக்கில் தொங்கவிட்டு தப்பி ஓடிய ராஜு, வாலாஜாபேட்டை அடுத்த மருதாலம் கேட் பகுதியில் காட்பாடிசென்னை செல்லும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் மகள்களை தூக்கில் தொங்கவிட்டு தப்பி ஓடியவர், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Related posts

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட நடன இயக்குநர் ஜானிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

வேலூர் மாவட்டம் ஊசூர் அரசு ஆண்கள் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களிடையே மோதல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு