செமிகண்டக்டர் துறையில் இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு 50% நிதி உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு

காந்திநகர்: செமிகண்டக்டர் துறையில் இந்தியாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 50% நிதி உதவி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் ‘செமிகான் இந்தியா மாநாடு 2023’ நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், ஒன்றிய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ், ராஜிவ் சந்திரசேகர், குஜராத் முதல்வர் பூபேந்தர் படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: ஒவ்வொரு தொழிற்புரட்சியும் ஆர்வமுள்ள மக்களால் வெவ்வேறு கால கட்டத்தில் நடந்துள்ளன. தற்போது நிகழும் நான்காவது தொழிற்புரட்சி இந்தியர்களின் விருப்பத்தினால் நடந்து வருவதாக நம்புகிறேன்.

இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தியை பெருக்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் நோக்கம். இதற்காக, செமிகண்டக்டர் துறையில் இந்தியாவில் தங்களது உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவ முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 50% நிதி உதவி அளிக்க அரசு தயாராக உள்ளது. இதன் மூலம் அத்துறைக்கு சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. இது செமிகண்டக்டர் துறையில் வடிவமைப்பு, உற்பத்தி, தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றில் உலகின் மையாக இந்தியாவை மாற்றும். செமிகண்டக்டர் துறையில் இந்தியா அதிவேக வளர்ச்சி அடையும். செமி கண்டக்டர் துறையில் சர்வதேச அளவில் முதலீடுகளை கவரும் நாடாக இந்தியா மாறி வருகிறது.

ஒராண்டுக்கு முன், இந்திய செமி கண்டக்டர் துறையில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என மக்கள் கேட்டனர். தற்போது அவர்கள், ஏன் இந்தியாவில் முதலீடு செய்யக்கூடாது? என கேட்கின்றனர். இந்தியாவின் ஸ்டார்அப் சூழலும் இத்துறைக்கு தேவையான வலிமை அளிக்கும். இந்தியாவில் 300 கல்லூரிகள் செமிகண்டக்டர் வடிவமைப்பு உள்ளிட்ட படிப்புகளுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் இத்துறையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வடிவமைப்பாளர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிப் உற்பத்தியை அதிகரிக்க அரசு ஊக்கம் அளித்து வருகிறது. ஏனெனில், இன்றைய உலகிற்கு நம்பகமான சிப் விநியோகச் சங்கிலி தேவைப்படுகிறது. புதிதாக தொடங்கப்படும் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு பல்வேறு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது பெருநிறுவனங்களுக்கான குறைந்த வரி விதிப்பு நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்