நிதியை கேட்டா பதிலுக்கு மரியாதையை கேட்கிறாங்க.. கடைசி காலத்திலாவது நியாயமா நடந்துக்கோங்க… உதயநிதி ஸ்டாலின் ‘பொளீர்’

உங்கள் ஆட்சியின் கடைசி காலத்திலாவது எங்களுக்கு நியாயமாக சேர வேண்டிய நிதிப்பகிர்வை தந்திடுங்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். ஒன்றிய பாஜ அரசு, பாஜ ஆளாத மாநிலங்களுக்கான நிதியை ஒதுக்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருவதாக ஏற்கனவே மாநில அரசுகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக தென் மாநிலங்கள் அதிக அளவில் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், நிதி பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு ரூ.6 லட்சம் கோடி வரி கொடுத்துள்ள போதும், ரூ.1.58 லட்சம் கோடியை மட்டுமே வரிப்பகிர்வாக ஒன்றிய அரசு திருப்பிக் கொடுத்துள்ளது. ஆனால், ரூ.3.41 லட்சம் கோடி வரி கட்டிய உத்தரபிரதேசத்துக்கு கிட்டத்தட்ட ரூ.7 லட்சம் கோடி வரிப்பகிர்வை வாரி வழங்கியுள்ளார்கள். தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியைக் கேட்டால் பதிலுக்கு மரியாதையை கேட்கிறார்கள். மாண்புமிகு, மரியாதைக்குரிய, பிரதமர் அவர்களே, ஒன்றிய நிதியமைச்சர் அவர்களே இப்போதாவது சொல்லுங்கள் நாங்கள் யாருடைய மரியாதைக்குரிய தகப்பனார் வீட்டு பணத்தை கேட்டோம்?. உங்கள் ஆட்சியின் கடைசி காலத்திலாவது, எங்களுக்கு நியாயமாக சேர வேண்டிய நிதிப்பகிர்வை தந்திடுங்கள். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு