சிறந்த செயல்பாட்டிற்காக தொடர்ச்சியாக நிதி கமிஷன்களால் தமிழ்நாடு தண்டிக்கப்படுகிறது: நிதிக்குழு கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

சென்னை: திருவனந்தபுரத்தில் 16வது நிதிக்குழு தொடர்பான மாநில நிதித்துறை அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், தமிழக அரசின் சார்பில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு பேசியதாவது: மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நிகர வருவாய் பங்கீட்டை அதிகரிக்க நிதிக் கமிஷன்கள் முயன்றன. அதன்படி, 15வது நிதிக் குழுவால் 41 சதவீதம் பரிந்துரைக்கப்பட்டாலும், முதல் நான்கு ஆண்டுகளில் மொத்த வரி வருவாயில் 31.42 சதவீதம் மட்டுமே பகிர்ந்தளிக்கப்பட்டது.

செஸ் மற்றும் கூடுதல் கட்டண விதிப்பால், வரி வருவாய் பகிர்வு குறைவாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், பகிர்வு முறை மாற்றத்தினால், மத்திய அரசின் திட்டங்களில் மாநில அரசுகள் அளிக்க வேண்டிய நிதியின் பங்கு அதிகரித்து விடுகிறது. இது மாநிலங்களுக்கு இரண்டு பக்கமும் அடி விழுந்தாற்போல் உள்ளது. மேலும், மாநில அரசின் ஏற்கனவே உள்ள திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களுக்காக செலவு செய்வதற்கான போதிய நிதி ஆதாரத்தை பெற முடியவில்லை.

மத்திய வரிப் பகிர்வில் 50 சதவீத பங்கை மாநிலங்கள் கூட்டாக கேட்கின்றன. மானியங்களின் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவது தொடர்பாக நிதிக் கமிஷனிடம் வலியுறுத்த வேண்டும். செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், மாநிலங்களின் நலன்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் கமிஷன் ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, அதன் சிறந்த செயல்பாட்டிற்காக தொடர்ச்சியாக நிதி கமிஷன்களால் தண்டிக்கப்படுகிறது.

அதாவது, 9வது நிதிக் கமிஷனின் போது தமிழகத்திற்கான 7.93 சதவீத நிதிப்பகிர்வு, 15வது நிதிக் கமிஷனில் வெறும் 4.07 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. தொடர்ந்து நீடித்ததால் தமிழக அரசுக்கு ரூ.3.57 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தமிழகத்தில் நிலுவையில் உள்ள கடனில் 43 சதவீதம்.

இது மாநில நிதியத்தின் மீது மிகப் பெரிய சுமையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், மாநிலம் தனது முழுத் திறனையும் செயல்படுத்துவதற்கான வாய்ப்பை இழக்கச் செய்கிறது. மாநிலங்களுக்கு இடையேயான பங்கை தீர்மானிக்கும் போது, அனைத்து நிதிக் கமிஷன்களும் சமபங்கு மற்றும் செயல்திறனுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.

Related posts

கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவான வாலிபர் கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை: 5 பேருக்கு வலை

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்