“உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்… உலகத்தில் போராடலாம்’’ திரைப்பட பாடல் பாடி மாணவர்களை உற்சாகப்படுத்திய முதன்மை கல்வி அதிகாரி

பெ.நா.பாளையம் :கோவை அருகே அரசு பள்ளி துவக்கவிழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திரைப்பட பாடல் பாடி மாணவ, மாணவியர்களை உற்சாகப்படுத்தினார்.
துடியலூர் அருகே உள்ள இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளி துவக்க நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தேர்வு விடுமுறை முடிந்து 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அனைத்தும் நேற்று முன்தினம் முதல் செயல்பட தொடங்கி உள்ளது. இந்த பள்ளியின் தொடக்க நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கியது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி தேசியக்கொடி ஏற்றினார். முன்னதாக, பள்ளிக்கு புதிதாக வந்த மாணவர்களுக்கும், ஏற்கனவே பயின்று வரும் மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கி கைதட்டி ஆசிரியர்கள் உற்சாகமாக மாணவர்களை வரவேற்றனர். அப்போது நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மாணவர், மாணவிகள் முன்பு “உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்… உலகத்தில் போராடலாம்’’ என்ற திரைபட பாடலை பாடி உற்சாகப்படுத்தினார்.

தொடர்ந்து, ஆங்கில வழியில் 10ம் வகுப்பு பயின்று முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.தமிழ் வழியில் 10ம் வகுப்பில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஆண்டாள் அம்பாள் குடும்பத்தார் சார்பில் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. 2022-2023ம் கல்வியாண்டில் முதலிடம் பிடித்த மாணவியின் உயர்கல்வி பயில ஏதுவாக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

அதேபோல், முதல் 5 இடம் பிடித்த மாணவர்களுக்கு தலா ரூ.2000 வழங்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சார்பில் பயின்ற ராகவன் என்ற மாணவருக்கு 3 ஆண்டு பாலிடெக் கல்லூரி கட்டணம் முதல் தவணையாக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றதற்காக ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் பள்ளி வளாகத்தினை சுற்றிப் பார்த்தார்.

பிறகு மரக்கன்று நட்டு வைத்தார். தொடர்ந்து தலைமை ஆசிரியர் சித்ரா வகுப்பறைகளில் உள்ள வசதிகள் குறித்து பேசினார். குறிப்பாக, ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தின் மூலமாக கணினி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவகிறது. அதனை தொடர்ந்து, இப்பள்ளி வளாகத்துக்குள் பயின்று வரும் மாணவ, மாணவியருக்கு பகுதி நேரத்தில் தையல் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

அதேபோல், ஸ்டேஷனரி பொருட்கள் அனைத்தும் குறைவான விலையில் மாணவர்களே எடுத்துக் கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவன மேலாளர் அண்ணாதுரை, நிர்வாகி ராஜா, உதவி தலைமை ஆசிரியர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

குழந்தை தொழிலாளர் யாரும் இல்லாத நிலை உருவாக்க வேண்டும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறியதாவது:

குழந்தைகள் மூலம் பெறப்படும் வருமானம் வீட்டுக்கு அவமானம் என்பதை பெற்றோர் உணர வேண்டும். கோவை மாவட்டத்தை குழந்தை தொழிலாளர் யாரும் இல்லாத நிலை உருவாக்க வேண்டும். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளில் அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளின் உரிமைகளை மதிப்பதோடு 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டோம் என உறுதியுடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைகளும் கல்வி கற்பது அடிப்படை உரிமை. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பிரபல ரவுடி சி.டி. மணிக்கு கால் எலும்பு முறிவு; மருத்துவமனையில் அனுமதி!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு!

போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கிய இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் கைது!