திருவள்ளூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: அனைத்து முன்னேற்பாடுகளும் தயார்

திருவள்ளூர்: திருவள்ளூர் தனி தொகுதியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து வேட்பு மனு தாக்கல் இன்று முதல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி திருவள்ளூர் (தனி) தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

அதன்படி தேர்தல் நடத்தும் அலுவலர் அறை மற்றும் வேட்பு மனுவை சரிபார்க்கும் அறை ஆகிய பகுதிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் வரையும் கிட்டத்தட்ட 10 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் வேட்பாளருடன் வரும் நபர்கள் விதிமுறைகளை மீறாமல் இருக்கும் வகையில் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேட்பாளருடன் 4 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் 5 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. மேலும் வேட்பு மனுக்களை சரிபார்த்து அனுப்புவதற்கான அறையில் அதற்கான அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர் இடத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திற்கு மேல் யாரும் வரக்கூடாது என்பதால் அவர்களை கண்காணிக்க காரில் சுழலும் கேமரா மூலம் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு நடத்த தயார் நிலையில் உள்ளனர். கலெக்டர் அலுவலகத்திற்குள் எந்த காரும் வராதபடி தடுப்புகள் அமைத்தும், எச்சரிக்கை பலகை வைத்தும் கண்காணித்து வருகின்றனர். எனவே வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டுமென கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

Related posts

முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்: சுற்றுலாத்துறை நடவடிக்கை

காவல் நிலையத்தில் குவிந்த பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

கோவளத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி: 360 மாணவிகள் பங்கேற்பு