விமான கட்டணத்தை ஆராய குழு வேண்டும்: மக்களவையில் தனிநபர் தீர்மானம் தாக்கல்

புதுடெல்லி: மக்களவையில் காங்கிரஸ் எம்பி ஷபி பரம்பில் தாக்கல் செய்த தனிநபர் தீர்மானம் வருமாறு: வளைகுடா நாடுகளில் பணிபுரியும் நமது நாட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திறமையற்றவர்கள் அல்லது குறைந்த வருமானம் கொண்டவர்கள். விடுமுறைக் காலங்களில் அவர்கள் நமது நாடு திரும்பும் போது அதிகமானவிமான கட்டணம் செலுத்துகிறார்கள். அவர்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர். பெரும்பாலான நேரங்களில், அவர்கள் ஒரு வருட சேமிப்பை சுற்றுப்பயணத்திற்கான விமானக் கட்டணங்களுக்காக மட்டுமே செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் பல வெளிநாட்டவர்கள் டிக்கெட் பெறுவதற்காக அவர்கள் பெரும் கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே விமான கட்டணம் குறித்து ஆராய குழு அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

633 இந்திய மாணவர்கள் பலி: வெளிநாடுகளில் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் 633 பேர் பலியாகி உள்ளனர். இதில் 108 பேர் அமெரிக்காவிலும், 58 பேர் இங்கிலாந்திலும், 57 பேர் ஆஸ்திரேலியாவிலும், 37 பேர் ரஷ்யாவிலும், 18 பேர் உக்ரைனிலும், 24 பேர் ஜெர்மனியிலும் பலியாகி உள்ளனர். கனடாவில் அதிகபட்சமாக 172 பேர் பலியாகி உள்ளனர்என்று மக்களவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன்சிங் தெரிவித்தார்.

யானை தாக்கி 2,853 பேர் பலி: மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறுகையில்,’கடந்த 5 ஆண்டுகளில் யானை தாக்கி 2,853 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக ஒடிசாவில் 624 பேரும், ஜார்கண்ட் 474, மேற்கு வங்கத்தில் 436, அசாமில் 383, சட்டீஸ்கரில் 303, தமிழ்நாட்டில் 256, கர்நாடகாவில் 160, கேரளாவில் 124 பேரும் பலியாகி உள்ளனர்’ என்றார்.

ஐந்து கோடி வழக்குகள் நிலுவை: உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வில் தற்போது 50 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் ஐந்து கோடி வழக்குகள் நிலுவையில் என்று சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தெரிவித்தார்.

* 5 வயதுக்குட்பட்ட 36% குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள்
நமது நாட்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 17 சதவீதம் பேர் எடை குறைவாக உள்ளனர், 36 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றியவர்களாகவும்உள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் அன்னபூர்ணா தேவி மக்களவையில் தெரிவித்தார். இதில் உத்தரப் பிரதேசம் 46.36 சதவீத குழந்தைகள் அதிக வளர்ச்சி குன்றிய விகிதத்தில் உள்ளனர். அதைத் தொடர்ந்து லட்சத்தீவு 46.31 சதவீதமாக உள்ளது. மகாராஷ்டிரா 44.59, மத்தியப் பிரதேசம் 41.61 சதவீதம் என ஆபத்தான வளர்ச்சி குன்றிய விகிதங்களை பதிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.

* கவர்னர்களுக்கு எதிரான மசோதா மாநிலங்களவையில் தோல்வி
மாநிலங்களில் அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்பது தொடர்பான தனிநபர் மசோதா நேற்று மார்க்சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ் கொண்டு வந்தார். இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, பாஜ அரசு அல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு எதிராக செயல்படுவதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர். விவாதம் முடிந்த பிறகு குரல் ஓட்டெடுப்பு மூலம் மசோதா தோற்கடிக்கப்பட்டதாக அவையின் துணைத்தலைவர் ஹரிவன்ஸ் தெரிவித்தார்.

Related posts

‘பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்’ குப்பை கொட்டுவதை தடுக்க வடிவேலு பாணியில் சுவர் விளம்பரம்

காங்கயத்தில் வெறிநாய்கள் கடித்து 34 ஆடுகள் பலி : நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு

மணவாளக்குறிச்சி ஐஆர்இஎல் நிறுவனத்திற்காக 1144 ஹெக்டேரில் 59.88 மில்லியன் டன் மண் எடுக்க திட்டம்…