வெறுப்பு பேச்சு புகார் இருந்தால் புதியதாக மனு தாக்கல் செய்யுங்கள்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு


புதுடெல்லி: வெறுப்பு பேச்சு தொடர்பான புகார் இருந்தால், புதியதாக மனு தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் மனுதாரருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரியானா மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வகுப்புவாத கலவரம், அதனால் ஆறு பேர்கள் உயிரிழப்புகள் ஆகியவைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மற்றொரு சமுதாயத்தினரை கொல்வோம் என்று சொல்வதும், அவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியிலாக புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவிப்பதும் வேதனையான ஒன்றாக உள்ளது. மேலும் இத்தகைய வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பேச்சுக்களை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. அனைத்து சமுதாயத்தினரும் இணக்கமான முறையில் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகளை பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முறையிட்டார். அதில், ‘வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதியப்பட்ட நபர்கள் தொடர்ந்து வெறுப்பு உணர்வை தூண்டும் வகையில் தற்போதும் பேசி வருகின்றனர். எனவே இது தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

இம்மனு விசாரணைக்கு வந்தபோது, ‘தனி நபர்கள் தொடுத்த ஒவ்வொரு வழக்கு தொடர்பாக சம்மந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தை மனுதாரர் அணுக ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம். உச்ச நீதிமன்றத்தை பொறுத்தவரையில் வெறுப்பு பேச்சை தடுக்க பொதுவான வழிகாட்டு நெறிமுறை வகுப்பது குறித்தே கையாளுகிறோம். எனவே புதிதாக குறிப்பிட்டு ஏதாவது வெறுப்பு பேச்சு நிகழ்வு இருந்தால், அதுதொடர்பாக புதிய மனு தாக்கல் செய்யுங்கள்’ என்று உத்தரவிட்டது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு