விழாக்கால உணவுகள்!

பழங்காலத்தில் தமிழர்கள் வெவ்வேறு வகையான உணவுகளை உண்டு வந்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஐவகை நிலங்களிலும் ஐந்து வகையான உணவுகள் உண்ணப்பட்டதாக சங்க இலக்கியங்களின் வாயிலாக அறிகிறோம்.தமிழகத்தில் குறிஞ்சி நிலம் ஒரு சிறப்பான கூறுகள் கொண்ட நிலம். மலையும், மலை சார்ந்த இடம்தான் குறிஞ்சி நிலம். இந்த வகை நிலத்தில் வாழ்ந்த மக்கள் கிழங்கு வகைகள், மலையில் விளையும் காய்கறிகள், சில இறைச்சி வகைகள், வரகு, சாமை, தினை, கேழ்வரகு போன்றவற்றை உண்டுள்ளனர். காடும், காடு சார்ந்த இடத்தையும் முல்லை என வரையறுத்திருக்கிறார்கள். காடுகளில் விலங்குகளுக்கு பஞ்சம் இருக்காது. அவைதான் முல்லையில் வாழ்ந்த மக்களுக்கு சிறப்பு உணவு. முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் காட்டு விலங்கின் இறைச்சிகள் மட்டுமின்றி காட்டுக் காய்கறிகள், சில நெல் வகைகள், மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றையும் ருசித்திருக்கிறார்கள். தமிழ் கூறு நல்லுலகில் மருதம்தான் அதிக நிலப்பரப்பைக் கொண்டதாக இருக்கும். வயலும், வயல் சார்ந்த இடமும் மருதம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மருதத்தில்தான் பல தானியங்கள் விளைவிக்கப்படும். மருத நில மக்கள் நெல் வகைகள், மரக்கறி வகைகள், ஊறுகாய், பயறு வகைகள் போன்றவற்றை உண்டு வந்திருக்கிறார்கள். இன்றும் சாப்பிடுகிறார்கள்.

நெய்தல் என்பது கடற்கரையோரப் பகுதிதான். நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்கள், நண்டுக்கறி, மீன் வகைகள் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு இருக்கிறார்கள். நெய்தலின் உணவு நமக்கு எப்போதும் சிறப்பான உணவுதான். இன்றும் மீன், நண்டு வகை உணவுகள் நம் உணவுப்பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கிறது.இவ்வாறு உணவுப் பண்பாட்டில் நிலவி வந்த பன்முகத்தன்மை மெல்ல மறைந்து தென்னிந்திய மக்களின் உணவு என்பது இன்று அரிசி உணவாக மாறிப்போயிருக்கிறது. அதுபோலவே பண்டிகைக் காலங்களிலும் அவரவர் வசதிக்கேற்ப வெவ்வேறு வகையான உணவுகளை சமைத்து உண்பது பழங்கால மரபாக இருந்து வந்துள்ளது. ஆனால் இன்று பண்டிகைக்கால உணவு என்பது அனைவர் வீடுகளிலும் ஒரே மாதிரி ஆகிப்போய் இருக்கிறது. தமிழர்களின் பண்டிகை மட்டுமின்றி இந்துக்களின் பண்டிகையும், பண்டிகைகளும் தமிழர்களின் பண்டிகைகளாகவே ஆகிப்போயின. தமிழர்களின் தனிப்பெரும் பண்டிகையான பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. அந்த நான்கு நாட்களிலும் நான்கு விதமான உணவுகளை சமைத்து இயற்கைக்கும், வேளாண்மைக்கு துணை நிற்கும் மாட்டுக்கும் படைப்பது தமிழர்களின் மரபு.ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி போன்ற இந்துக்களின் பண்டிகைகளும் இன்று தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.

பொங்கல்

மற்ற பண்டிகைகளை விடவும் பொங்கல் பண்டிகைக்கென்று தனிச்சிறப்புகள் பல உண்டு. பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளான போகிப் பண்டிகையன்றே கிராமப்புற மக்களுக்குப் பொங்கல் தொடங்கி விடுகிறது. போகிப் பண்டிகை அன்று மாலை வீட்டில் பச்சரிசியில் நீர் தெளித்து இடித்து மாவாக்கி வெல்லம் கலந்து, அதில் வேப்பிலைகளை இட்டு வைத்துப் படைப்பது வழக்கம். இந்த மாவினைத் ‘துள்ளுமாவு’ எனக் குறிப்பிடுகின்றனர். ‘தெள்ளுமா’ என்பதே ‘துள்ளுமாவு’ எனப் பேச்சுவழக்கில் குறிப்பிடப்படுகிறது. கருவாட்டுக் குழம்பு வைத்துப் படைப்பது வழக்கமாகப் பின்பற்றப்படுகிறது.போகிப் பண்டிகையில் ‘துள்ளுமாவு’, கருவாட்டுக் குழம்பு இரண்டும் குறிப்பிடத் தகுந்த உணவு வகைகளாகும். பொங்கலன்று செய்யப்படும் குழம்பு, துணை உணவு வகைகளான கூட்டு, பொரியல் போன்றவற்றில் உள்ளூரில் விளையும், கத்தரி, வெண்டை, அவரை, பூசணி, பறங்கி, வாழை போன்ற காய்களைப் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.

மாட்டுப்பொங்கல்

உழவுத் தொழிலில் உறுதுணையாய் விளங்கிய மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டே இப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாடுகள் வைத்திருப்பவர்கள் இப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். மாடு இல்லாதவர்கள் இவ்விழாவைக் கொண்டாடுவதில்லை.

கரிநாள்

கரிநாளன்று காலை இட்லி, தோசை போன்றவற்றை உண்பர். மதியம் மீன் / கறிக் குழம்புடன் உணவு உண்பர்.

ஆயுத பூஜை

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஆகிய விழாக்களையும் தமிழர்கள் கொண்டாடும் மரபு தொடர்ந்து வருகிறது. மற்ற நாட்களில் சமைப்பதை விட இந்த நாட்களில் சிறப்பான உணவை சமைத்து சாப்பிடுகிறார்கள். குறிப்பாக வடை, பாயசம் ஆகியவை மதிய உணவோடு சேர்க்கப்படுகின்றன. மாலையில் கொண்டைக்கடலையால் சுண்டல் செய்து பொரி, பொட்டுக்கடலை ஆகியவற்றை வெல்லம் கலந்து படைத்து உண்ணுகின்றனர். இதுபோல் பல பண்டிகைகள் நமது உணவுக்கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்தே இருக்கின்றன. – இரத்தின. புகழேந்தி.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம்

ஜாமீனில் வெளி வந்த சீமான் கட்சி பிரமுகர் மேலும் ஒரு வழக்கில் கைது: விடிய விடிய விசாரணை

செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு