திருவிழா என்று சொல்லி கல்லா கட்டும் தாமரை பிரமுகரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘எம்பி தேர்தலில் இலைக்கட்சியில் வாய்ப்பு கிடைக்காத ஆதங்கத்தை வெளிப்படுத்த ஆர்ப்பாட்டத்தை பயன்படுத்திக்கிட்ட மாஜி தன்னைப்பற்றி அள்ளிவிட்டாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியின் சார்பில் சேலத்துக்காரரின் சொந்த ஊரில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்துச்சு… இதுக்கு தலைமை வகிச்சவரு மாஜி ரெட்கில்ஸ். பேருக்கு பின்னால மலையை கொண்டவரு மற்றும் மம்மியுடன் ரொம்ப நெருக்கமாக இருந்தவர் இவரு. நடந்து முடிஞ்ச எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்னு எதிர்பார்ப்பும் அவரிடம் பலமாக இருந்துச்சு… இப்படிப்பட்ட நிலையில்தான் மாங்கனி நகரில் நடந்த இலை கட்சி ஆர்ப்பாட்டத்தில் மாஜி ரெட் கில்ஸ், தனது அருமை பெருமைகளை சொல்வதற்கான ஒரு அரிய வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டாராம்… ஆம், ஆர்ப்பாட்டத்தில் மைக்கை பிடிச்சு பேசும்போது ‘‘நான் மந்திரியாக இருந்தபோது என்னெல்லாம் செய்தேன், எப்படி எல்லாம் நடந்தது’’னு ஒரு பாடமே எடுத்தாராம்.. அதிலும், ‘மம்மி அமைச்சரவையில் 6 மந்திரிங்க பாக்குற துறைகளை நான் ஒத்த ஆளா பார்த்தேன். 12 ஐஏஎஸ் அதிகாரிகள் என் பின்னாடி நிற்பார்கள். அப்படியெல்லாம் பணியாற்றியவன் நான்’னு தன்னை பற்றி அள்ளிவிட்டாராம்.. இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த தொண்டர்கள், எம்பி தேர்தலில் சேலத்துக்காரர் வாய்ப்பு கொடுக்காததை நம்ம ஆளு எப்படியெல்லாம் போட்டு தள்ளுராரு பாருங்கன்னு வெளிப்படையாகவே பேசிக்கிட்டாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பெருமாள் பெயரை சொல்லி பல லட்சம் வசூலித்து கல்லா கட்டி வருகிறாராமே தாமரை கட்சி பிரமுகர்’’ என முதல் கேள்வியை கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தாமரை கட்சியினாலே கட்டப்பஞ்சாயத்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை சேர்ப்பது, அடாவடி மற்றும் வசூலில் ஈடுபட்டு பிரச்னை வந்த பிறகு கட்சியை விட்டு நீக்குவது என்பது வாடிக்கையாக நடக்கிற விஷயம்னு மக்களே ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவத்துக்கு வந்துவிட்டாங்க.. ஆனாலும், தாமரை கட்சிக்காரங்க அதையெல்லாம் ஒரு பொருட்டா எடுத்துக்கல இன்னும்.. மெடல் மாவட்டத்தின் பட்டாசு நகரத்தில் தாமரை மாவட்ட நிர்வாகி ஒருவர் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடமும் வசூல்வேட்டையில் ஈடுபட்டு, போலீசாரின் கைது நடவடிக்கைக்கு ஆளானாராம்.. இதே பகுதியைச் சேர்ந்த மாநில நிர்வாகியோ, பெருமாள் கோயில் பெயரில் உள்ள அறக்கட்டளையில் நிர்வாகியாக இருக்கிறாராம்.. இவர் கோயிலில் நடக்கும் திருவிழாக்களை பயன்படுத்தி பல லட்சம் வசூல் செய்து கல்லா கட்டி வருகிறாராம்.. கோயில் பெயரைச் சொல்லி இவர் ஆடும் அடாவடி ஆட்டம், கோயில் முக்கிய பிரமுகர்களை மட்டுமின்றி, அவரது சொந்த கட்சியினரையே முகம் சுளிக்க வைச்சிருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் சில மருத்துவர்கள் டகால்டி வேலை செய்றதா புகார் வருதே.. என்னா விஷயம்..’’ என ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் சில மருத்துவர்கள் பணிக்கு சரியாக வருவதில்லை. பயோ மெட்ரிக் வைத்து விட்டு, வெளியே தங்கள் சொந்த கிளினிக்கிற்கு செல்வதுடன், ரத்த பரிசோதனை செய்ய வெளியே தனியார் லேப்புகளில் சிண்டிகேட் அமைத்துள்ளனராம்.. இதில் பயிற்சி மருத்துவர்களையும் தொடர்ந்து ஈடுபடுத்தி வந்துருக்காங்க.. கல்லூரி உள்நோயாளிகள் முதல் புறநோயாளிகளுக்கு மருந்துகள், சிகிச்சை உபகரணங்கள் வெளியே, தங்களது மருந்தகங்களில் வாங்க அனுப்புவதாக எழுந்த புகார்களை அடுத்து கல்லூரி டீன் நடவடிக்கை எடுத்தாராம்… இதில் கடுப்பில் இருந்த மருத்துவர்கள், சென்னை இயக்குநரகத்தில் உள்ள கட்டளையிடும் அதிகாரியை, கோட்டாறில் இருந்து சென்னையில் பணியாற்றி வரும் ஒரு மருத்துவர் மூலம் அணுகியிருக்காங்க.. அவரும், தவறு செய்யும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், டீனை முடக்கி வைச்சிருக்காரு.. இதில் குளிர் விட்ட பல மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் சிலர், டீனை சிறிதும் மதிக்காமல் மிரட்டும் வகையில் செயல்பட்டு வந்திருக்காங்க.. இந்நிலையில் உள்நோயாளி ஒருவரை நள்ளிரவில் டிஸ்சார்ஜ் செய்து, அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பான புகாரில், இரு பெண் மருத்துவர்கள் சிக்கியிருக்காங்க.. இதில் ஆவணங்களை அழித்ததாக போலீசில் புகார் செய்ததுடன், கல்லூரி உறைவிட மருத்துவ அலுவலரை டீன் சஸ்பெண்ட் செய்தாராம்… ஆனால் சஸ்பெண்ட் ஆர்டரை பெற மாட்டேன். மாவட்ட கலெக்டர் கூறினால் மட்டுமே ஆர்டரை பெறவேண்டும்னு சென்னையில் உள்ள அதிகாரி கூறிவிட்டார்னு மறுத்துள்ளார். இதனையடுத்து, கலெக்டரை சந்தித்து டீன் சஸ்பெண்டுக்கான உரிய விளக்கம் அளிச்சிருக்காரு.. அதன் பின்னரே சஸ்பெண்ட் உத்தரவை ஆர்.எம்.ஓ பெற்று சென்றுள்ளார்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கட்சி அலுவலகத்திற்குள் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் சாலைக்கு வந்து கோஷமிட்டு பரபரப்பு ஏற்படுத்தி விட்டாராமே முன்னாள் தேனிக்காரர் ஆதரவு அணியின் மன்னர் பெயரை கொண்டவர்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக இலை கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாங்க… கடைகோடி மாவட்டத்தில் இலை கட்சியினர் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லையாம்.. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது என்ற நிலை ஏற்பட்டதாம்.. இதனால் திட்டமிட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தாமல் கடைசி நேரத்தில் முடிவை மாற்றினாங்களாம்.. கட்சி அலுவலகத்திற்கு உள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தை நடத்தி முடிச்சிருக்காங்க.. இதில் முன்னாள் தேனிக்காரர் ஆதரவு அணியின் மன்னர் பெயரை கொண்டவர் திடீரென்று அந்த கூட்டத்தில் இருந்து விலகி தனது ஆதரவாளர்கள் சிலருடன் சாலைக்கு வந்து கோஷம் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தி விட்டாராம்.. அப்போது அவர்களை சூழ்ந்த போலீசார் எச்சரித்து அனுப்பி வைச்சிருக்காங்க..’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு