திருவிழாவில் நடுரோட்டில் போதையில் குத்தாட்டம் தட்டிக்கேட்ட பெண் காவலரை பிளேடால் கிழித்த வாலிபர்கள்

சோழிங்கநல்லூர்: கோயில் திருவிழாவில் பேருந்துக்கு வழிவிடாமல் போதையில் குத்தாட்டம் போட்டதை தட்டிக்கேட்ட பெண் காவலரை, பிளேடால் கிழித்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டை பி.என்.தெரு மற்றும் பாலாஜி தெரு சந்திப்பில் முண்டக்கண்ணியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் திருவிழா நடந்தது.

இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதால் கூட்ட நெரிசலாக காணப்பட்டது. இதனால், அசம்பாவிதங்களை தவிர்க்க, ராயப்பேட்டை உதவி கமிஷனர் தலைமையில் ஆயுதப்பட்டை போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

அப்போது, சாமி ஊர்வலத்தின் முன்பு அதே பகுதியை சேர்ந்த அஜய் (23), கிஷோர் (22), ஸ்ரீதர் (21), சசி (14) ஆகிய 4 பேர் மது போதையில் குத்தாட்டம் போட்டனர். அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த மாநகர பேருந்துக்கு வழி விடாமல் போதையில் வாலிபர்கள் ஆடியதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை பெண் காவலர் கவுசல்யா (26), போதை வாலிபர்களை பேருந்துக்கு வழிவிடுமாறு கூறினார். அதற்கு அவர்கள் ‘இது எங்கள் ஏரியா.. நீ ஓரம் போ’ என்று கூறி மீண்டும் ஆடினர். இதனால் ெபண் காவலர் வாலிபர்களை கண்டித்துள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த அஜய் என்பவர், கையில் வைத்திருந்த பிளாடால் காவலர் கவுசல்யாவை கையில் கிழித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிட்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அவர், வலியால் துடித்தார். உடனே சக போலீசார் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சம்பவம் குறித்து ஆயுதப்படை காவலர் கவுசல்யா அளித்த புகாரின் படி, ராயப்பேட்டை போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அஜய் மற்றும் கிஷார், ஸ்ரீதர், சசி ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு