பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை வழக்கு ராஜேஷ்தாஸ் மேல் முறையீடு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி டெல்டாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கடந்த ஜூன் 16ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ்தாஸ், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான தீர்ப்பு ஜனவரி 6ம் தேதி அளிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ராஜேஷ்தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாதிடுவதை தவிர்ப்பது போன்ற எண்ணம், முதன்மை அமர்வு நீதிபதி மனதில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது’ எனக் கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது ராஜேஸ்தாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாதங்களை முன் வைக்க அவகாசம் கேட்ட நிலையில் விழுப்புரம் அமர்வு நீதிபதி, தீர்ப்பை தள்ளி வைத்துள்ளார்.

அதனால் வழக்கை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்தால் தனக்கு நியாயம் கிடைக்காது. எனவே, விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். இந்த மனு மீது முடிவெடுக்கும் வரை விழுப்புரம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ், நேற்று அளித்த தீர்ப்பில் ராஜேஷ் தாசின் கோரிக்கையில் எந்த முகாந்திரமும் இல்லை. எனவே விழுப்புரம் நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளிக்க எந்த தடையும் இல்லை என்று உத்தரவிட்டுள்ளார்.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்