பெண் மருத்துவர் கொலை நடந்து ஒரு மாதம் நிறைவு; மேற்குவங்கத்தில் விடியவிடிய போராட்டம்: மம்தா அரசுக்கு நெருக்கடி அதிகரிப்பு

கொல்கத்தா: பெண் மருத்துவர் கொலை நடந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், நேற்றிரவு மேற்குவங்கத்தில் விடியவிடிய போராட்டம் நடந்தது. அதனால் முதல்வர் மம்தா அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. கொல்கத்தா ஆர்.ஜி.கார் மருத்துவமனை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. சம்பவம் நடந்து இன்றுடன் ஒரு மாதம் ஆன நிலையில், பல்வேறு வழிகளில் சாதாரண மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் பாஜக, காங்கிரஸ், சிபிஎம், எஸ்யூசிஐ போன்ற கட்சிகளும், அதன் துணை அமைப்புகளும் போராட்டம் நடத்தின. மத்திய கொல்கத்தா என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரியில் இருந்து தர்மதாலா வரை மருத்துவர்களின் ஊர்வலம் நடந்தது.

கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. நேற்றிரவு சோத்பூரில் இருந்து ஷயாம்பஜார் வரையிலான 15 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்கள் பலர் சாலையை மறித்து போராடியதால், போலீசார் கூட்டத்தை அப்புறப்படுத்தினர். வடக்கு கொல்கத்தாவின் சிம்லா பல்லியில் உள்ள சுவாமி விவேகானந்தரின் இல்லம் முன்பும் போராட்டம் நடத்தினர். தெருக்களில் பல்வேறு வண்ணங்களில் ஓவியர்கள் பல்வேறு படங்களை வரைந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். தெருக்களில் கண்டன வாசகங்கள் எழுதப்பட்டன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஏராளமான மக்கள் தடையை மீறி போராட்டம் நடத்தினர். ஜாதவ்பூரில் பல்வேறு கலாச்சார நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இரவு முழுவதும் இசை நிகழ்ச்சி நடந்தது. அதேபோல் தைவானின் சிஞ்சு நகரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் போராட்டம் நடத்தினர். அட்லாண்டா, சான் டியாகோ, பாஸ்டன், ஹூஸ்டன், அயோவா, மினியாபோலிஸ், நியூயார்க், சியாட்டில், தம்பா, விர்ஜினியா உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. மேற்குவங்கத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடப்பதால், முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related posts

திண்டிவனம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி