பெண் காவலர்களை அவதூறாக பேசிய யூடியூபர் சங்கரின் செயலை மன்னிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி: பெண் காவலர்களை அவதூறாக பேசிய யூடியூபர் சங்கரின் செயலை மன்னிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். யூடியூபர் சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனால் இவ்வழக்கை ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதன்படி, இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணை வந்தது. தமிழக அரசு சார்பில் கூடுதல் அவகாசம் கேட்டதை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனை எதிர்த்து சங்கரின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். இம்மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில், ‘குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சங்கர், சட்ட ஒழுங்குக்கு எதிராக செயல்பட்டுள்ளார். பெண் காவலர்களுக்கு எதிராக அவதூறு பரப்பினார். மாநில அரசுக்கும், முதல்வருக்கும் எதிராக பேசினார். இவர் மீது நான்கு வழக்குகள் உள்ளதால், அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குபதியப்பட்டது. எனவே சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டது. சவுக்கு தரப்பில், ‘பல வழக்குகள் இருந்தாலும், குண்டர் சட்டத்தில் கைது செய்தது தவறு’ என்று கூறப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘சங்கர் நடந்து கொண்ட விதம் மன்னிக்க முடியாதது. இருந்தாலும் அவருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியுமா? முடியாதா? என்பதை ஆராய வேண்டும். எனவே இவ்வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும்’ எனக்கூறி, வழக்கு விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்