பாதங்கள் பளபளக்க பளிச் பேக்ஸ்!

பொதுவாக நாம் முகம், கழுத்து மற்றும் கைப்பகுதி சருமத்தில்தான் அதிக கவனம் செலுத்துகிறோம். கால் பாதங்கள் பற்றி நாம் பெரிதாக கவனத்தில் எடுத்துக் கொள்வதும் இல்லை. கவனிப்பதும் இல்லை. இதனால், பாத சருமம் மிகவும் வறண்டதாகவும், வெடித்தும் காணப்படலாம். இது கால் அழகை மட்டுமல்லாமல், கால் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.உங்கள் கால்களில் வறண்ட சருமம் இருப்பது சங்கடமாகவும், அரிப்புடனும் இருக்கும். ஏனென்றால், உங்கள் காலில் உள்ள தோலில் உங்கள் உடலின் மற்ற பாகங்களைப் போல எண்ணெய்ச் சுரப்பிகள் இல்லை. உங்கள் கால் சருமத்தில் இயற்கையான எண்ணெய்கள் குறைவாக இருப்பதால், அது விரைவில் வறண்டு அரிப்பு ஏற்படுகிறது. இதிலிருந்து விடுபடுவதற்கான முதல் படி, உங்கள் பாதங்களை சுத்தமாகவும், உலர்ந்ததாகவும் வைத்திருப்பதுதான். இது தவிர வறண்ட, தடித்த பாதத் தோலை அகற்ற உதவும் சில கால் பேக்குகள் உள்ளன. வறண்ட பாத தோலில் இருந்து விடுபட இதோ சில பயனுள்ள பேக்.

ஊறவைத்த ஓட்ஸ் பேக்

கால்களில் உள்ள வறண்ட மற்றும் கடினமான சருமத்தை மென்மையாக்க ஓட்ஸ் ஒரு சிறந்த வழி. உங்கள் பாதத்தை ஊறவைக்க ½ கப் சமைக்காத ஓட்ஸ் 2 கப் வெதுவெதுப்பான நீரில் கலக்க வேண்டும். அந்த கலவையில் உங்கள் கால்களை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு ஓட்மீல் கொண்டு உங்கள் கால்களை மெதுவாக தேய்த்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் இறந்த கடினமான செல்கள், சருமத்துகள்கள் நீங்கி பாதங்கள் மென்மையாகும்.

தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் பேக்

தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் பேக் உங்கள் கால்களின் வறண்ட, கடினமான சருமத்திற்கு நல்ல மாய்ச்சர் கொடுத்து கால்களை மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் வைக்க உதவும். ஒரு சிறிய கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும். கலவையை உங்கள் கால்களில் தடவி, தோலில் 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்னர் அப்படியே சிறிது நேரம் வைத்திருந்து பேக் சற்று உலர்ந்ததும், இரண்டு கால்களிலும் தடிமனான காலுறைகளை அணிந்து, ஒரே இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். காலையில் உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வறட்சி நீங்கி கால்கள் மென்மையாக இருக்கும். இவை குளிர்காலத்திற்கு மிகவும் ஏற்ற பேக்.

அவகோடா மற்றும் வாழைப்பழ கால்பேக்

அவகோடா மற்றும் வாழைப்பழங்கள் இரண்டும் கால்களின் வறண்ட, கடினமான சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கும் . இந்த பேக் செய்ய, பழுத்த அவகாடோவில் ½ மற்றும் பழுத்த வாழைப்பழத்தில் ½ ஆகியவற்றை ஒன்றாக மசிக்க வேண்டும். கலவையை உங்கள் கால்களில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விடவும். அதன் பிறகு, உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.குளிர்காலங்களில் வறண்ட பாதங்கள் என்பது பலருக்கும் பிரச்னையாகவே இருக்கும் . அதிக குளிர், தவறான வகை காலணிகளை அணிவது, கால்களை அதிகம் ஈரப்பதமாக்குவது அல்லது சில நோய்களுக்காக எடுக்கப்படும் மருந்துகளின் விளைவுகள், மழை காரணமாக சகதிகள், மழை நீரின் தாக்கம், ஈரத்திலேயே அதிகம் நின்று வேலை செய்வது உள்ளிட்ட பல காரணங்களால் காலின் பாதங்கள் வறட்சி, வெடிப்புகள் என பிரச்னைகளை சந்திக்கும். வறட்சி, சாதாரண பாத வெடிப்புகளுக்கு மேலே சொன்ன பேக்கள் போல இன்னும் வீட்டிலேயே செய்யக் கூடிய நிறைய பேக்குகள் உள்ளன.
– பா. கவிதா

 

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு