ஊட்டியில் தூய்மை காவலர்களுக்கான மருத்துவ முகாம்

ஊட்டி : ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) தூய்மையே சேவை 2024 பிரச்சாரத்தின் ஒருபகுதியாக தூய்மை காவலர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் தூய்மையே சேவை – 2024 பிரச்சாரம் செப்டம்பர் 17ம் முதல் அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 13 ஊராட்சிகளில் உள்ள 250 தூய்மை காவலர்களுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

நமது மாவட்டத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பதில் தூய்மை காவலர்களின் பங்கு முதன்மையானது. தூய்மை காவலர்கள் அவர்களது உடல் நலத்தை சுகாதாரமாக வைத்து கொள்வதற்காக தான் இந்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.இம்முகாமில் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான மருத்துவ பரிசோதனைகள்,பொது மருத்துவம்,எலும்பியல் மருத்துவம்,கண் மருத்துவம்,இதய பரிசோதனைகள் உள்ளிட்டவற்றிற்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதனை தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுவோருக்கு நமது அரசு மருத்துவமனைகளிலேயே அனைத்து வசதிகளும் உள்ளதால்,அங்கேயே சிகிச்சை பெற்று கொள்ளலாம், என்றார்.

முன்னதாக தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் தூய்மை உறுதி மொழியை அரசு அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட பலர் ஏற்று கொண்டனர்.இதில் கூடுதல் ஆட்சியர் கௌசிக், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சலீம், அண்ணாதுரை, ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

குட்கா வழக்கு; முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆஜராக உத்தரவு!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

தமிழக மீனவர்கள் 5 பேர் கைது.. இலங்கை கடற்படையினரின் அட்டகாசத்தை ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பதா?: ராமதாஸ் கேள்வி