ஊட்டி அருகே சாலையில் உலா வரும் காட்டு மாடு: பொதுமக்கள் அச்சம்

ஊட்டி: ஊட்டி அருகே சாலையில் உலா வரும் ஒற்றை காட்டுமாட்டை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் காட்டு மாடுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவை தற்போது காட்டில் வாழ்வதை காட்டிலும் மக்கள் வாழும் பகுதிகளில் அதிகளவு வலம் வருகின்றன. தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள் மற்றும் சாலைகளில் வலம் வரும் இந்த காட்டு மாடுகளால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.

சில சமயங்களில் காட்டுமாடுகள் பொதுமக்களை தாக்கவும் செய்கிறது. இதனால், மனித- விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சமீப காலமாக நுந்தளா கிராமத்துக்கு செல்லும் சாலையில் ஒற்றைக் காட்டு மாடு ஒன்று உலா வருகிறது. இதனால், அவ்வழியாக நடந்து செல்லக்கூடிய பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சில சமயங்களில் வாகனங்களில் செல்பவரை காட்டுமாடு விரட்டுகிறது. எனவே, காட்டு மாட்டை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்

அரசின் திட்டங்களை கண்காணிக்கவும் செயல்படுத்தவும் மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

ஃபோர்டு நிறுவனத்தின் மனுவை பரிசீலனை செய்து அனுமதி வழங்கியது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்