ஊட்டி சுற்றுவட்டார பகுதியில் லெட்டியூஸ் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

ஊட்டி: ஊட்டியில் சைனீஸ் வகையான லெட்டியூஸ் காய்கறிகள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் 60 சதவீதத்திற்கு மேல் விவசாயிகள் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக பெரும்பாலான விவசாயிகள் கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ், பூண்டு, பட்டாணி, காலிபிளவர் உள்ளிட்ட மலை காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சூப் மற்றும் துரித உணவுகளில் பயன்படுத்தப்படும் செலாரி, லெட்டியூஸ், சைனீஸ் கேபேஜ், சுக்கினி, புருக்கோலி மற்றும் லீக்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக எப்பநாடு, சின்ன குன்னூர், தும்மனட்டி, மரகல், அணிக்கொரை, இடுஹட்டி, தாம்பட்டி, நுந்தளா போன்ற பகுதிகளில் சைனீஸ் வகை காய்கறிகள் மற்றும் கீரைகள் அதிக அளவு பயிரிடப்படுகிறது.

இதில், மலை காய்கறிகளை காட்டிலும் சைனீஸ் காய்கறி மற்றும் கீரைகளுக்கு எப்போதும் ஒரு சீரான விலை கிடைப்பதால், தற்போது விவசாயிகள் இந்த காய்கறிகளை பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, சூப்புகளில் பயன்படுத்தப்படும் லெட்டியூஸ் அதிகளவில் பயிரிடப்படுகிறது. தற்போது லெட்டியூஸ் ஒரு கிலோ ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. 3 மாதத்திற்கு ஒரு முறை அறுவடை செய்யப்படும் இந்த காய்கறிகள் மற்றும் கீரைகள் தற்போது ஊட்டியில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்