வால்பாறையில் பயங்கரம்; வீட்டின் மீது மண் சரிந்து பாட்டி, பேத்தி பலி

வால்பாறை: வால்பாறையில் மண் சரிந்து வீட்டின் மேல் விழுந்ததில் பாட்டி, பேத்தியுடன் பலியானார். கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 2 நாளாக கன மழை பெய்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. மழையளவு மிமீட்டரில்: சின்னக்கல்லார்(239), சின்கோனா(232), பரம்பிக்குளம் (233), வால்பாறை(194) , சோலையாறு(185) என பதிவாகியுள்ளது. இதனால் இங்குள்ள கூழாங்கல், வாழைத்தோட்டம் ஆறு, சோலையாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 165 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை ஏற்கனவே நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சோலையாறு அணையின் இடது கரை பகுதியில் இன்று அதிகாலை மண் சரிந்து கற்கள் மரத்துடன் ஒரு வீட்டின் மீது விழுந்தது. அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ராஜேஸ்வரி(65), அவரது பேத்தி தனபிரியா(14) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தனபிரியா, சோலையாறு அணை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். ராஜேஸ்வரியின் கணவர் ஆறுமுகம் (70) அருகில் உள்ள தங்கும் விடுதியில் இரவு பணிக்கு சென்று விட்டார். இதனால் அவர் உயிர் தப்பினார். தனபிரியாவின் பெற்றோர் கோவையில் பணிபுரிந்து வருகின்றனர். இத்தகவலறிந்த அவர்கள் வால்பாறைக்கு விரைந்து வந்து மகள், அவரது பாட்டியின் சடலத்தை பார்த்து கதறியழுதனர். சோலையாறு போலீசார் சடலத்தை மீட்டு வால்ாபறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மண்சரிந்து வீட்டின் மீது விழுந்து பாட்டி பேத்தியுடன் பலியானது இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Related posts

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்

பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்; ‘குவாட்’ உச்சி மாநாட்டை கண்டு சீனா அஞ்சுவது ஏன்?.. வல்லரசு நாடுகளுடன் இந்தியா கைகோர்த்ததால் தலைவலி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை, மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை