மரண பயம் போக எந்த கடவுளை வணங்க வேண்டும்?

ஏன் எதற்கு எப்படி..?

மரண பயம் போக எந்த கடவுளை வணங்க வேண்டும்?

– என்.ஜெயக்குமரன், திருநெல்வேலி.

ம்ருத்யுஞ்ஜயன் என்றழைக்கப்படும் பரமேஸ்வரனை வணங்க வேண்டும். ம்ருத்யு என்றால் மரணம், ஜயன் என்றால் வெற்றி கொள்பவன், அதாவது ம்ருத்யுஞ்ஜயன் என்றால் மரணத்தை வென்றவன் என்று பொருள். மரணத்தை யாராலும் தவிர்க்க முடியாது. அதே நேரத்தில் ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து வந்தால் மரணபயம் என்பது நீங்கிவிடும். நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தாலே மரணபயம் என்பது நீங்கிவிடும். வைணவ சம்பிரதாயத்தை பின்தொடர்பவர்கள் என்றால் வைகுந்தவாசப் பெருமாளை அதாவது பாம்பணையில் பள்ளிக்கொண்டிருக்கும் பெருமாளை மனதிலே தியானித்து ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை தொடர்ந்து ஜபம் செய்து வந்தால் மரணபயம் என்பது நீங்கிவிடும்.

?எந்தெந்த நிவேதனங்கள் (படையல்) எந்தெந்த இறைவனுக்கு சமர்ப்பித்து வணங்குவது கூடுதல் பலனைத் தரும்?
– இரா.வளையாபதி, கரூர்.

இறைவனுக்கு சமர்ப்பிக்கப்படும் நிவேதனங்களில் வேறுபாடு ஏதும் இல்லை. நாம் அன்றாடம் உண்ணும் உணவு கூட இறைவனின் அருட்பிரசாதம்தானே. குறிப்பிட்ட நிவேதமைதான் கூடுதல் பலனைத் தரும் என்றெல்லாம் விதிகள் ஏதுமில்லை. அதே நேரத்தில் இந்த நிவேதனம் இந்த தெய்வத்திற்கு உகந்தது என்பது போல் நம்மவர்கள் சம்பிரதாயமாக பிரித்து வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு விநாயகருக்கு மோதகம், அப்பம், கொழுக்கட்டை, அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல், பரமேஸ்வரனுக்கு பால்சாதம், பெருமாளுக்கு புளியோதரை, மஹாலக்ஷ்மிக்கு பாயாசம், தேனுடன் கூடிய பேரீச்சம்பழம், துர்கைக்கு எலுமிச்சை சாதம், சுப்ரமணிய ஸ்வாமிக்கு தேங்காய் சாதம், தேன், தினை மாவு, பைரவருக்கு உளுந்து வடை போன்று விசேஷமான நிவேதனங்களை சமர்ப்பித்து வணங்குவது வழக்கத்தில் உள்ளது. நாம் உண்ணும் உணவுப்பொருட்கள் அனைத்தும் இறைவனின் அருட்பிரசாதம்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

?சென்ற ஆண்டு வீடு கட்டி குடியேறி உள்ளோம். வடக்கு வாசல் மற்றும் மேற்கு வாசல் வைத்து இருக்கிறோம். வாஸ்து முறைப்படி சரியா?
– மு.விஜயராணி, ராமநாதபுரம்.

தலைவாசல் என்பது வீட்டிற்கு ஒன்றுதான் இருக்க வேண்டும். ஒருவீட்டிற்கு இரு வாசல் என்பது இருக்கக் கூடாது. அதே நேரத்தில் புழக்கடை அல்லது தோட்டத்திற்கான பின் வாசல் என்பது இருக்கலாம். பொதுவாக தலைவாசலுக்கு நேராக பின்வாசல் அமைந்திருப்பது நல்லது. கிராமப்புறங்களில் இதுபோன்ற அமைப்பினை இன்றளவும் காணலாம். நீங்கள் வீடு கட்டி குடியேறி உள்ள மனை ஆனது கார்னர் பிளாட் ஆக இருந்து வடக்கு மற்றும் மேற்கு ஆகிய இரு திசைகளிலும் தெருக்கள் இருந்தாலும் ஏதேனும் ஒரு வாசலைத்தான் தலைவாசலாக உபயோகிக்க வேண்டும். மற்றொன்றினை எப்பொழுதும் மூடி வைத்திருப்பதுதான் நல்லது. எந்த வாசலை உபயோகிக்க வேண்டும் என்பது உங்களுடைய மனை மற்றும் வீட்டின் அளவுகளையும் உங்கள் ஜாதகத்தில் உள்ள நான்காம் பாவத்தைப் பொறுத்தும் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்ப ஜோதிடரிடம் ஆலோசனைப் பெற்று செயல்படுங்கள். நல்லதே நடக்கும்.

?பேய், பிசாசு, பில்லி சூனியம் இவையெல்லாம் உண்மையா?
– த.நேரு, வெண்கரும்பூர்.

ஒவ்வொரு விசைக்கும் நேர்எதிர்விசை உண்டு என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. அறிவியல் ரீதியாக இந்த விதியினை ஏற்றுக்கொள்ளும் நாம் கண்ணுக்குப் புலப்படாத இந்த தீய சக்திகளை நம்ப மறுக்கிறோம். உலகில் நல்ல சக்தி அதாவது நேர்மறை ஆற்றல் என்ற ஒன்று இருக்கும் பட்சத்தில் அதற்கு எதிராக செயல்படும் தீயசக்தி அல்லது எதிர்மறை ஆற்றல் என்ற ஒன்று இருக்கத்தானே செய்யும். இந்த எதிர்மறையான எண்ணங்கள் அல்லது எதிர்மறை சக்திகளைத்தான் பேய், பிசாசு, பில்லி சூனியம் என்றெல்லாம் உருவகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். மனதில் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொண்டு இறைசக்திகளின் மேல் முழுமையான நம்பிக்கை வைத்திருப்பவர்களிடம் இந்த பேய், பிசாசு மற்றும் பில்லி சூனியம் எதுவும் வேலை செய்யாது.

?பூர்வ ஜென்ம பாவம் என்றால் என்ன? அது தீர பரிகாரம் உண்டா?
– பி.கனகராஜ், மதுரை.

முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியத்தின் பலனைத்தான் இந்த ஜென்மத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் ஜோதிடத்தின் அடிப்படை விதி. ஜாதகம் எழுத தொடங்கும்போது ஜெனனீ ஜென்ம சௌக்யானாம் வர்த்தனீ குல சம்பதாம் பதவீ பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா என்ற வரிகளை முதலில் எழுதியிருப்பார்கள். அதாவது முற்பிறவியில் செய்த கர்ம வினைக்கு ஏற்றவாறு இந்த குழந்தையானது இந்த ஜென்மத்தில் பலன்களை அனுபவிக்க இருக்கிறது என்பது இதன் பொருள். முற்பிறவியில் எந்தளவிற்கு பாவம் செய்திருக்கிறோமோ அதற்கேற்றவாறு இந்த ஜென்மாவில் கஷ்டத்தை அனுபவிக்கிறோம், அதனால் இந்தப் பிறவியிலாவது புண்ணியம் தரும் செயல்களை அதிகமாகச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள்.

மேலும் பூர்வ ஜென்ம க்ருதம் பாபம் வ்யாதி ரூபேண பீடதே என்று ஸ்ம்ருதி வாக்கியம் சொல்கிறது. அதாவது முன்ஜென்மத்தில் செய்த பாவம் ஆனது இந்த ஜென்மத்தில் வியாதியின் வடிவில் வந்து சேர்கிறது என்று நம்முடைய தர்மசாஸ்திரம் சொல்கிறது. பூர்வ ஜென்ம பாவம் தீர வேண்டும் என்று சொன்னால் அதற்கான பலனை அனுபவித்துத் தீர்ப்பதுதான் ஒரே வழி. தெய்வ வழிபாடும் நல்லெண்ணங்களும் கர்மபலனை அனுபவித்து தீர்ப்பதற்கான உடல் வலிமையை நமக்குத் தரும், அவ்வளவுதான். முன்ஜென்ம வினையில் இருந்து தப்பிப்பது என்பது நடக்காது. எல்லோருமே அவரவர் செய்த வினைக்கான பலனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.

?சில ஆண்கள் ஒரு காதில் கம்மல் போடுகிறார்கள். இது ஆன்மிகம் சார்ந்ததா?
– வண்ணை கணேசன், சென்னை.

பெண்கள் மட்டும்தான் காதணிகளை அணிய வேண்டும் என்பதில்லை, ஆண்களும் அணிய வேண்டும். ஆண்கள் அணிகின்ற காதணிக்கு கடுக்கன் என்று பெயர். ஆண்கள் ஒரு காதில் மட்டுமல்ல, இரண்டு காதுகளிலும் கடுக்கன் கண்டிப்பாக அணிய வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நாம மறந்துபோன அல்லது நாம் கைவிட்ட பழக்கங்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது.

ஆனால் குழந்தைக்கு மொட்டை அடித்து காதுகுத்தும் பழக்கத்தினை மட்டும் நாம் இன்றளவும் பின்பற்றி வருகிறோம். பெண்குழந்தைக்கு தொடர்ச்சியாக தோடு, கம்மல் ஆகியவற்றைப் போட்டு அழகுபார்க்கும் நாம் ஆண்பிள்ளைக்கு அது தேவையில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டோம். இது தவறு. ஆண்களும் இரண்டு காதுகளிலும் கடுக்கன் அணிய வேண்டும். இது நமது பண்பாடு மட்டுமல்ல, சாஸ்திரம் நமக்கு காட்டுகின்ற வழியும் கூட.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

ஏன் எதற்கு எப்படி…?
தினகரன், ராசி பலன்கள்
தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை – 600 004.

Related posts

இந்த வார விசேஷங்கள்

செவ்வாய்க்கிழமை நல்ல நாளா, இல்லையா?

கலைமகளின் கவின்மிகு கோயில்கள்