தோல்வி பயத்தில் கூட்டணி என்று வதந்தி பரப்புகிறது பாஜ: பிஜேடி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு

புவனேஸ்வர்: தோல்வி பயத்தினால்தான் கூட்டணி குறித்து பாஜவினர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர் என ஒடிசா ஆளும் கட்சியான பிஜேடி குற்றம் சாட்டியுள்ளது. ஒடிசாவில் கட்சி தாவல்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் கோபால்பூர் தொகுதி பிஜேடி எம்எல்ஏ பிரதீப் பானிகிரஹி,மாஜி அமைச்சர் தேபசிஸ் நாயக் ஆகியோர் கட்சியில் இருந்து விலகி பாஜவில் சேர்ந்தனர்.சிலிகா எம்எல்ஏ பிரசாந்த் ஜெகதேவ் என்பவரும் பிஜேடியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். மேலும் ஒரு எம்எல்ஏ அரவிந்தா தாலி நேற்று பாஜவில் சேர்ந்தார். இந்த விவகாரத்தால் இரு கட்சிகள் இடையே வார்த்தை போர் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கூட்டணி குறித்து வதந்தி பரப்புவதாக இரண்டு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டி உள்ளன. பிஜேடி தேசிய செய்தி தொடர்பாளர் சாஸ்மித் பத்ரா,‘‘ பலமாக உள்ள பிஜேடி கட்சிக்கு எந்த கட்சியுடனும் கூட்டணிக்கு அவசியமே இல்லை.பாஜ தான் தோல்வி பயத்தில் இது போன்ற வதந்திகளை பரப்புகிறது’’ என்றார். மாநில பாஜ தலைவர் மன்மோகன் சமால் கூறுகையில்,‘‘பிஜேடி கட்சி கூட்டணி குறித்து வதந்திகளை பரப்பி வருகிறது. பிஜேடி கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கோ அல்லது பேச்சுவார்த்தை நடத்துவதற்கோ எந்தவித வாய்ப்பும் இல்லை’’ என்றார்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு