15 வயது மகள் காதல் கண்டித்த தந்தை கொலை: காதலன், நண்பர் கைது

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவரின் 15 வயது மகள் மானாமதுரை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை, மானாமதுரையை சேர்ந்த சிவபிரகாஷ் (19) காதலித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மாணவியின் தந்தை, மகளை கண்டித்தார். கடந்த 15ம் தேதி சிறுமியின் வீடு அருகே சிறிய பாலத்தில் நின்று சிறுமியும், சிவபிரகாசும் பேசிக் கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்த சிறுமியின் உறவினரான 18 வயது சிறுவன், அவரை கண்டித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனால், சிவபிரகாஷ் ஆத்திரமடைந்து அங்கிருந்து சென்றார். அன்று மாலை சிறுமியின் உறவினரான 18 வயது சிறுவனிடம் தனது காதல் குறித்து பேச வேண்டும் என சிவபிரகாஷ் அழைத்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தை 18 வயது சிறுவன், அவரது சகோதரர் ஒருவர் ஆகியோர் சிறிய பாலம் பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த சிவபிரகாஷ் மற்றும் அவரது நண்பர் வினோத் (19) ஆகியோரை சிறுமியின் தந்தை கண்டித்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த இருவரும் சிறுமியின் தந்தையை தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இரு வாலிபர்களும் தப்பியோடினர். அக்கம்பக்கத்தினர் மாணவியின் தந்தையை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிந்து சிவபிரகாஷ் மற்றும் வினோத்தை கைது செய்தனர்.

Related posts

சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமம் ரத்து: ஒருவர் கைது

பெண் டாக்டர் தற்கொலை

டேங்கர் லாரியில் இருந்து திருடப்பட்ட 18,400 லிட்டர் டீசல் பறிமுதல்