தந்தைக்கு பண உதவி செய்வதற்காக வழிப்பறியில் நகையை இழந்ததாக நாடகமாடிய பெண்: போலீசார் எச்சரித்து அனுப்பினர்

திருவள்ளூர்: திருத்தணியில் தந்தைக்கு பண உதவி செய்வதற்காக வழிப்பறியில் நகையை இழந்ததாக நாடகமாடிய பெண்ணை போலீசார் எச்சரித்து அனுப்பினர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பழைய தர்மராஜா கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் (48). இவர் திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனை கல்லூரியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் வீட்டின் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வரும் மகன் மற்றும் மகளுக்கு மதிய உணவு வழங்கிவிட்டி நாராயணனின் மனைவி பிரசாந்தி (37) தர்மராஜா கோயில் ரயில் தண்டவாளம் அருகில் சிறிய பாலத்தின் கீழே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் முகமுடி அணிந்து வந்த மர்ம நபர்கள் தனது கழுத்தில் அணிந்திருந்த 5 சரவன் தாலிச் சரடை பறித்து மின்னல் வேகத்தில் பறந்ததாக காவல் நிலையத்தில் பிரசாந்தி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் டிஎஸ்பி விக்னேஷ், இன்ஸ்பெக்டர் மதியரசன் ஆகியோர் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு மேற்கொண்டனர். இதில் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் வழிப்பறி போன்ற எந்த நிகழ்வும் நடக்காததால், பிரசாந்தியிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு பணம் தர வேண்டும் என்பதற்காக திருத்தணி கவரை தெருவில் உள்ள விநாயகா ஜுவல்லர்ஸ் என்ற அடகு கடையில் ரூ.1.30 லட்சத்திற்கு தனது நகையை பிரசாந்தி அடமானம் வைத்து பணம் வாங்கியதும், அதனை மறைக்க வழிப்பறி சம்பவம் நடந்ததுபோல் அவர் நாடகமாடியதும் தெரிய வந்தது. இதனையடுத்து மூன்று மணி நேரத்துக்கு மேலாக போலீசாரை அலைக்கழித்த பிரசாந்தியை காவல்துறையினர் எச்சரித்து, அடகு வைத்து பெற்ற பணம் மூலம் மீண்டும் நகையை மீட்டுக் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை