தந்தையை ஏமாற்றி ₹7 லட்சத்தை பறித்தனர்; பட்டுக்கோட்டை தொழிலாளி மலேசியாவில் கொலை: உடலை சாக்குமூட்டையில் கட்டி வீச்சு

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையை சேர்ந்த தொழிலாளி மலேசியாவில் கொலை செய்யப்பட்டு உடலை சாக்குமூட்டையில் கட்டி வீசியுள்ளதாக தந்தைக்கு தகவல் வந்துள்ளது. முன்னதாக அவரிடம் மகனை ஊருக்கு அனுப்ப ₹7 லட்சம் தரும்படி கேட்டு பறித்துள்ளனர். இதுபற்றி அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மன்னைநகரை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி வசந்தா. இவர்களது மகன் விநாயகமூர்த்தி (41). இவருக்கு புகழேந்தி என்ற மனைவி, ஹர்ஷிகா என்ற மகளும், ஆதித்தன் என்ற மகனும் உள்ளனர். அன்பழகன் பட்டுக்கோட்டையில் சலூன் கடை வைத்துள்ளார்.

விநாயகமூர்த்தி கடந்த 11 மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் நிரந்தர விசாவில் பணிபுரிய ஏஜென்ட் மூலம் ₹1 லட்சம் செலுத்தி சென்றார். ஆனால் ஏஜென்ட் அவரை ஏமாற்றி தற்காலிக விசாவில் வேலைக்கு அனுப்பியது பின்னர் தெரியவந்தது. விநாயகமூர்த்தி மலேசியாவில் ‘ஓவர் ஸ்டே’ என்ற கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த கம்பெனி உரிமையாளர் விநாயகமூர்த்தியின் தந்தையை தொடர்பு கொண்டு, ‘உங்கள் மகனை இந்தியாவுக்கு அனுப்ப ₹10 லட்சம் தர வேண்டும்’ என கேட்டுள்ளார். இதற்கு ₹ 7 லட்சம் தருகிறேன் என அன்பழகன் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து சினிமா பாணியில், ‘நான் ஒரு 10 ரூபாய் பணம் வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்கிறேன்.

ஒரு நபர் அந்த ரூபாய் நோட்டில் உள்ள நம்பரை கொண்டு வந்து உங்கள் வீட்டில் காட்டுவார். அவரிடம் பணத்தை கொடுத்து அனுப்பவும். மேலும் இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் உங்கள் மகனை கொன்று விடுவேன்’ என மிரட்டியுள்ளார். அதேபோல் கடந்த 3ம்தேதி, முத்தலிப் என்ற நபர் அன்பழகன் வீட்டிற்கு வந்து 10 ரூபாய் நோட்டை காண்பித்து ₹ 7 லட்சத்தை வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட முத்தலிப், தனது ஆதார் கார்டு, லைசென்ஸ், அவரது புகைப்படத்தையும் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் மலேசியாவில் உள்ள உறவினர் ஒருவர் நேற்றுமுன்தினம் அன்பழகனுக்கு போன் செய்து ‘உங்கள் மகன் விநாயகமூர்த்தியை கொலை செய்து ஒரு மூட்டையில் கட்டி அங்குள்ள வீதியில் வீசியெறிந்து விட்டு சென்று விட்டார்கள்’ என கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அன்பழகன், பட்டுக்கோட்டை நகர போலீசில் நேற்று புகார் அளித்தார். அதில், ‘மலேசியாவில் பணிபுரிந்த எனது மகனை அந்த நிறுவனத்தின் முதலாளியே கொன்று விட்டார்’ என கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!