கம்பி வேலியில் சிக்கிய பெண் சிறுத்தை உயிரிழப்பு


ஊட்டி: ஊட்டி அருகே தீட்டுக்கல் பகுதியில் தனியார் தோட்டத்தில் கம்பி வேலியில் சிக்கிய பெண் சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது அனைத்து பகுதிகளிலும் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிறுத்தை, காட்டு மாடு, புலி, யானை, கரடி என பல்வேறு வனவிலங்குகள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இவைகள் உணவு தேடி மக்கள் வாழும் பகுதிக்குள் வருவதால் அடிக்கடி மனித- வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. மேலும் விலங்குகளும் அடிக்கடி மின் வேலிகள் மற்றும் சுருக்கு கம்பிகளில் சிக்கி உயிரிழப்பது தொடர் கதையாக உள்ளது.

இந்நிலையில் ஊட்டி அருகே உள்ள தீட்டுக்கல் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் நேற்று இரவு கம்பி வேலியில் ஒரு சிறுத்தை சிக்கியது. இதை கண்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அப்போது அதன் இரு பின்னங்கால்களில் பைக் கிளட்ச் ஒயர் சிக்கி இருந்தது. இதனால் அதன் இரு கால்களும் செயல் இழந்தது தெரியவந்தது. மேலும் சிறுத்தையை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அதன் முதுகு எலும்பு மற்றும் தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது.

இதை அடுத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தது. இறந்தது 5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை என வனத்துறையினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக நீலகிரி வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

ரிஷி சுனக் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?.. இன்று நடைபெறும் இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் 107 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டி..!!

பீகாரில் உள்ள அனைத்து பாலங்களின் உறுதி தன்மையை ஆராய உயர்மட்டக் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தில் மனு!!

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியர் கைது..!!