மெரினா காமராஜர் சாலையில் பயங்கர விபத்து கார் மோதி பைக்கில் சென்ற அண்ணன், தம்பி பலி: டிரைவர் கைது

சென்னை: மெரினா, காமராஜர் சாலையில் கார் மோதி, பைக்கில் சென்ற அண்ணன், தம்பி பலியாயினர். சென்னை, சவுகார்பேட்டை வரதப்ப முதலி தெருவை சேர்ந்தவர் பிரவீன் (30), இவர் நேற்று மாலை 5 மணி அளவில் பைக்கில் எழிலகம் பகுதியில் இருந்து காமராஜர் சாலை, மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். பின் சீட்டில் அவரது தம்பி ரத்தன்(20) இருந்தார். உத்தரபிரதேசம், சாலிமார் தோட்டத்தை சேர்ந்த தேவ் சர்மா(20) என்பவர் தனது ஸ்கூட்டரில் அவ்வை சண்முகம் சாலையில் இருந்து காமராஜர் சாலை வழியாக கடற்கரை நோக்கி வருவதற்கு முயற்சித்தார்.

அப்போது, பிரவீனின் பைக், தேவ் சர்மாவின் ஸ்கூட்டர் ஆகியவை பயங்கரமாக மோதிக்கொண்டது. இதில், பிரவீன், ரத்தன் ஆகியோர் வண்டியுடன் கீழே விழுந்து சாலையில் சறுக்கியபடி சென்றனர். அந்த நேரத்தில், அந்த சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று, இருவர் மீது பயங்கரமாக மோதியது. பின்னர் சிறிது தூரம் சென்று நின்றது. கார் மோதிய விபத்தில் சகோதரர்கள் பிரவீன், ரத்தன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே பிரவீன் இறந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரத்தன் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, காயமடைந்த தேவ் சர்மாவை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, ராயப்பேட்டை, ஜானிஜான் கான் தெருவை சேர்ந்த கார் ஓட்டுனர் அப்துல் சையத்(26) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சுபமுகூர்த்த தினமான இன்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு: பத்திரப்பதிவு துறை தகவல்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

கழுகுகள் இறப்புக்கு காரணமான மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை உள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்