அள்ளித்தரும் அட்சயபாத்திரம் ஃபேஷன் ஃப்ரூட்!

எந்தப் பக்கம் திரும்பினாலும் மலைத்தொடர்தான். இடையில் அமைந்திருக்கிறது கம்பம் பள்ளதாக்கு. பொன் விளையும் பூமி என்பார்களே! அது உண்மை என சான்று பகரும் பூமி இது. திராட்சை, தென்னை, மா, கொத்தமல்லி, பல்வேறு காய்கறிகள், மலர் வகைகள் என பல பயிர்கள் இங்கு செழித்து வளர்கின்றன. இங்குள்ள பெரும்பாலான நிலங்கள் பசுமையாகவே காட்சியளிக்கின்றன. தோதான சீதோஷ்ண நிலை, முல்லைப் பெரியாற்று நீரின் வளமை என பல ப்ளஸ்கள் இங்கு விவசாயத்திற்கு தோள்கொடுத்து துணைபுரிகின்றன. கம்பம் மட்டுமின்றி அருகில் உள்ள கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளும் பசுமைப் பிரதேசமாக காட்சியளிக்கின்றன. திராட்சைக்குப் பேர்போன இந்தப்பகுதியில் இப்போது பேஷன் ஃப்ரூட்டும் பிரபலமாகி வருகிறது. இங்குள்ள ஏராளமான விவசாயிகள் தற்போது பேஷன் ஃப்ரூட் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். கூடலூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற விவசாயி 47 ஏக்கரில் இந்த பேஷன் ஃப்ரூட்டைப் பயிர் செய்து வருகிறார். மேலும் கேரளா உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டுமே பயிர் செய்யப்பட்டு வந்த இந்தப்பழத்தை இந்தப் பகுதிக்கு அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். இவரைப் பார்த்துத்தான் இப்பகுதியில் பலர் நம்பிக்கையோடு இந்த சாகுபடியில் இறங்கி கலக்கி வருகிறார்கள். ஒரு காலை வேளையில் ஜெயக்குமாரை சந்திக்கச் சென்றோம். கம்பத்தில் இருந்து குமுளி செல்லும் சாலையில் வலப்புறம் ஒரு சிறிய வாய்க்கால் போன்ற பாதை போகிறது. அந்தப் பாதையில் பயணித்து ஜெயக்குமாரின் பேஷன் ஃப்ரூட் தோட்டத்தை அடைந்தோம். மேற்குத் தொடர்ச்சி மலை பின்னணியில் பரந்து விரிந்த பந்தலுக்கு கீழே கொய்யாப் பழங்களைப் போல திரட்சியாக விளைந்து தொங்கிக் கொண்டிருந்த ஃபேஷன் பழங்களை, ஒவ்வொன்றாக பார்த்து அறுவடை செய்துகொண்டிருந்த ஜெயக்குமாரை சந்தித்தோம். நம்மை வரவேற்று பழங்களைப் பறித்துக் கொடுத்து, ருசிக்கச் சொல்லியவாறே பேச ஆரம்பித்தார்.

“கேரளாவில் பேஷன் ஃப்ரூட்னா ரொம்ப பிரபலம். அவங்க இதை ஜூஸ் போட்டு விரும்பி குடிப்பாங்க. இதனால அங்க இதை பல விவசாயிகள் பயிர் பண்றாங்க. நம்மூருல முக்காவாசி பேருக்கு பேஷன் ஃப்ரூட்னா என்னன்னு கேப்பாங்க. கம்பம் சுத்துவட்டாரத்துல பேஷன் ஃப்ரூட் பத்தி விவசாயிகள் நல்லா தெரிஞ்சி வச்சிருக்காங்க. 2016ம் வருசத்துல சோதனை முறையில இந்தப் பழத்தை சாகுபடி செஞ்சி பார்த்தேன். நல்லா பலன் கொடுத்ததால முறையா பயிர் செய்ய ஆரம்பிச்சேன். இப்போ நான் 47 ஏக்கர்ல பயிர் பண்றேன். அத்தனையும் குத்தகை முறையிலதான் பண்றேன். என்னைப் பார்த்து இப்போ நிறைய விவசாயிகள் பண்றாங்க’’ என சுருக்கமாக பேஷன் ஃப்ரூட் பற்றி பேசத்தொடங்கியவரிடம் மேலும் இதுபற்றி கூற முடியுமா? என கேட்டோம். இந்தப் பழத்தை எப்படி சாகுபடி செய்யத் தொடங்கினார்? அதன் சாகுபடி விபரம் என்ன? விற்பனை விபரம் என்ன? என்பது குறித்து ஒவ்வொன்றாக அடுக்க ஆரம்பித்தார்.

“திராட்சை உள்ளிட்ட பயிர்களுக்கு கான்ட்ராக்ட் முறையில பந்தல் அமைச்சிக் கொடுக்கும் தொழில் செஞ்சிட்டு வந்தேன். அப்போது கேரளாவுல பேஷன் ஃப்ரூட் தோட்டத்துக்கு பந்தல் போட கூப்பிட்டாங்க. அங்க போயிட்டு வந்தப்ப அந்தப் பழம் பத்தி தெரிஞ்சிக்கிட்டேன். இதை நம்மூர்ல விளைவிச்சி பாக்கலாமேன்னு யோசிச்சேன். கடந்த 2016ம் வருசத்துல 5 செடிகளை அங்கிருந்து கொண்டு வந்து கூடலூர்ல விளைய வச்சேன். அந்தச் செடிகள் நல்லா வளர்ந்து பழங்கள் கொடுத்துச்சி. நம்மூர் கிளைமேட்டுக்கும் இந்தப் பழம் வரும்னு உறுதியாச்சு. அந்த நம்பிக்கையில 5 ஏக்கர்ல அந்தப் பழத்தை விளைவிச்சேன். அதுலயும் நல்ல விளைச்சல். கேரள வியாபாரிகளை தொடர்புகொண்டு அந்தப் பழங்களை நல்ல விலைக்கு விற்பனை செஞ்சேன். அந்த தெம்புல 8 ஏக்கர், 10 ஏக்கர், 20 ஏக்கர்னு படிப்படியா அதிகரிச்சேன்’’ எனக் கூறிய ஜெயக்குமார் சாகுபடி விபரம் குறித்து தொடர்ந்தார்.

“ பேஷன் ஃப்ரூட்டை சாகுபடி செய்ய 2, 3 முறை 5 கலப்பையில கட்டியில்லாம நிலத்தை நல்லா உழவு பண்ணுவோம். அப்புறமா ரொட்டேவேட்டர் வச்சி ஒருமுறை உழவு பண்ணுவோம். உழவுக்குப் பிறகு 6 அடிக்கு ஒரு பார் அமைப்போம். இதுல கொடிகள் பந்தல்ல ஏறி படர்கிற வரைக்கும் ஊடுபயிர் செய்யலாம். ஊடுபயிர் செய்ற மாதிரி இருந்தா பார் அமைக்குறது நல்லது. இல்லன்னா பார் அமைக்காம அப்படியே நடவு பண்ணலாம். நாங்க பார் அமைச்சிதான் பயிர் பண்றோம். அந்த பார்ல 5 அங்குலம் அளவுக்கு குழியெடுத்து பேஷன் ஃப்ரூட் கன்றுகளை நடவு செய்வோம். ஆரம்பத்துல கேரளாவுல இருந்து செடி வாங்கிட்டு வந்து நடவு செஞ்சேன். இப்போ நானே கன்றுகளை உருவாக்கி நடவு பண்றேன். ஒரு செடிக்கும் இன்னொரு செடிக்கும் 20 அடி இடைவெளி இருக்குற மாதிரி பாத்துக்கணும். இதில் ரெண்டு முறையில கன்று நடவு பண்ணலாம். பார்ல நேராவே 20 அடிக்கு ஒன்னுன்னு நடவு பண்றது ஒருமுறை. மற்றொரு முறை ஜிக்சாக் முறையில நடவு பண்றது. நான் பெரும்பாலும் ஜிக்சாக் முறையில நடவு செய்வேன். ஒரு ஏக்கர்ல நடவு செய்ய 220 செடி தேவைப்படும். செடிகள் பிளாஸ்டிக் கவருக்குள்ள இருக்கும். நடவு செய்யும்போது கவரைப் பிரிச்சிட்டு நடவு பண்ணணும். நடவுக்கு முன்னதா வேப்பம்புண்ணாக்கு மற்றும் வாம் என்ற உரத்தைக் கலந்து செடிக்கு 100 கிராம்னு குழிக்குள்ள போடுவோம். அதுக்கூட மேல்மண்ணைப்போட்டு குழியை மூடுவோம். நடவு செஞ்ச உடனே செடிக்கு 3 லிட்டர்னு உயிர்த்தண்ணீர் கொடுப்போம். இதுக்கு சொட்டுநீர்ப்பாசனம் கொடுத்தா நல்லா இருக்கும்.

நடவுக்கு முன்னாடி பந்தல் அமைச்சிக்கணும். பந்தலோட உயரம் 6 அடி இருக்குற மாதிரி அமைக்கணும். அப்பதான் செடிகள் நல்லா வளர்ந்து படரும். நாம உள்ளே போய் பராமரிப்பு வேலை, அறுவடை வேலை செய்ய வசதியா இருக்கும். நடவு செஞ்சதில் இருந்து 1 நாள் விட்டு 1 நாள் பாசனம் செய்வோம். காய்ச்சலா இருந்தா தினமும் பாசனம் செய்வோம். செடி பந்தல்ல ஏறும் வரைக்கும் ஈரம் இருந்துக்கிட்டே இருக்கணும். களை வரும்போது அகற்றிக்கிட்டே இருக்கணும். தோட்டம் எப்பவும் சுத்தமா இருக்கணும். 15வது நாள்ல நீம் ஆயிலை 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்குல 50 மிலி கலந்து ஸ்பிரே பண்ணுவோம். இது சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். இந்தப் பூச்சிங்க வந்தா இலைகள் வறண்டு செடி சேதமாகிடும். பூச்சிகள் வர்றதைப் பொறுத்து இந்த மருந்தை அவ்வப்போது தெளிக்கலாம். மழை பெய்யும்போது என்பிகே உரத்தை அடியுரமா செடிக்கு 10 கிராம்னு கொடுப்போம். செடி வளர வளர உரத்தை அதிகப்படுத்தி கொடுப்போம். இந்த உரத்தை ஒரு ட்ரம்மில் கரைத்து செடிகளோட வேருக்கு பக்கத்துல ஊத்துவோம். செடிகள் வளர வளர தென்னை வருட்சியை (தென்னை மட்டையின் நடுவில் உள்ள தண்டுப்பகுதி) நட்டு வச்சி அதில சணல் மூலமா செடியைக் கட்டி பந்தல்ல ஏத்துவோம். திராட்சை, பாகற்காய் செடிகள் போலதான் இதையும் பந்தல்ல பதமா ஏத்தணும்.

45 நாள்ல செடிகள் வளர்ந்து பந்தலைத் தொட்டுரும். அதுக்கப்புறம் கொடிகள் பந்தல்ல நல்லா படரும். ஒருகட்டத்துல சூரிய ஒளியே படாத வகையில பந்தல் முழுக்க கொடிகள் இருக்கும். 3வது மாச கடைசில பூக்கள் வர ஆரம்பிக்கும். 4வது மாசத்துல பிஞ்சுகள் வைக்கும். 6வது மாசத்துல காய்ப்பு வரும். 6வது மாச கடைசில பழங்களை அறுவடை பண்ணலாம். அதுல இருந்து வாரம் ஒருமுறை பழங்களை அறுவடை பண்ணலாம். பச்சை கலரில் இருந்து மஞ்சள் கலருக்கு மாறுகிற பழங்களைப் பறித்து விற்பனை பண்ணுவோம். ஆரம்பத்துல ஒரு அறுவடையில 100ல இருந்து 200 கிலோ வரைக்கும் பழங்கள் கிடைக்கும். அப்புறம் 400 கிலோ, 500 கிலோன்னு கிடைக்கும். தொடர்ந்து 2 வருசம் வரைக்கும் பழங்கள் கிடைக்கும். ஒரு ஏக்கர்ல ஒரு வருசத்துல 10 ஆயிரம் கிலாவுல இருந்து 11 ஆயிரம் கிலோ வரைக்கும் மகசூல் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு சராசரியா 40 ரூபாய் விலை கிடைக்கும். 10 ஆயிரம் கிலோ மகசூல் கிடைச்சாலும் 4 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல பந்தல் செலவோடு சேர்த்து ரெண்டரை லட்ச ரூபாய் செலவு ஆகும். மீதி ஒன்றரை லட்சம் லாபமா கிடைக்கும். பந்தல் ஏற்கனவே அமைச்சிருந்தா 1 லட்சம் மட்டுமே செலவாகும். மீதி 3 லட்சத்தை சுளையா லாபமா பார்க்கலாம். அடுத்த வருசத்து அறுவடையில 5 டன் மகசூல் கிடைக்கும். இதுமூலமா 2 லட்சம் வருமானம் கிடைக்கும். இந்த சமயத்துல பந்தல் செலவு இல்ல. அது இல்லாம ஒரு 40 ஆயிரம் செலவாகும். இதுபோக 1 லட்சத்து 60 ஆயிரம் லாபம் கிடைக்கும். இதனாலதான் பேஷன் ஃப்ரூட்டை நான் தொடர்ந்து சாகுபடி செய்றேன்’’ என நெகிழ்ச்சியுடன் கூறி முடித்தார்.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்