ஆடை வடிவமைப்பு என்பது பெரும் சவால் : ஆடை வடிவமைப்பாளர் வனஜா செல்வராஜ்!!

தற்போது திருமணம் என்பதே ஆடம்பர நிகழ்வு என்றாகி விட்டது. பீச் திருமணம், தீம் வெட்டிங் என்பதும் பேஷனாகி வருகிறது. அதற்காக ஏற்படும் ஆடம்பரமான செலவினங்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. அதிலும் உடை விஷயத்தில் நவீன டிரெண்டியாக மார்டனாக இருக்கவேண்டும் என்பதே பலரின் ஆசைகள். இதில் மணமக்கள் உடைகள் குறித்துச் சொல்ல வேண்டுமா என்ன? திருமணத்திற்கு வரும் மக்களின் கண்கள் மொய்ப்பது மணமக்களைத் தானே… அதிலும் குறிப்பாக மணமகளின் உடைகள் அணிகலன்கள் என அனைத்தும் கவனம் ஈர்ப்பது இயல்பு. ஒவ்வொரு மணப்பெண்ணும் திருமண வைபவங்களில் தன்னை ஸ்பெஷலாகத் தான் உணர்ந்து கொள்வாள். வாழ்நாளில் முக்கிய காலகட்டத்தில் தன்னை ராணியாக நினைத்து வலம் வருவாள். அவளின் உடைகளை வடிவமைப்பது என்பது ஆடை வடிவமைப் பாளர்களுக்கான நவீன சவால்கள். ஒவ்வொரு மணப்பெண்ணும் தனித்துவமாகத் தெரியவேண்டும் என மெனக்கெடுபவர்கள் அவர்கள்தானே…! ஆடை வடிவமைப்பில் பல்லாண்டு காலமாக அனுபவம் பெற்று பாண்டிச்சேரியில் தனது தொழிலை மிக சிறப்பாக செய்து வரும் வனஜா செல்வராஜ் அவர்கள் ஆடை வடிவமைப்பு
குறித்தும், மணப்பெண் உடை வடிவமைப்பு குறித்தும் பகிர்ந்து கொள்கிறார்…

திருமண உடைகள் வடிவமைப்பது என்பது சவாலா?

திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் ரொம்ப ரொம்ப முக்கியமான வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்துப் போற்றப்பட வேண்டிய ஒரு நாள். அந்த நாளில் மணப்பெண் தன்னை தேவதை போல் அலங்கரித்துக் கொள்வதற்கான திட்டமிடலும், அதற்கான முன்னேற்பாடுகளும் நான்கைந்து மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட வேண்டியது இப்போதைய காலகட்டத்தில் அவசியமாகிறது.அதிலும் ஆள் பாதி ஆடை பாதி என்பதற்கேற்ப மிகவும் அழகான புடவையை எடுப்பதுடன் அதைவிட அழகாக அதற்கான பிளவுசை வடிவமைக்க வேண்டியது அவசியமாகிறது. இப்போதே பெண்கள் தங்களுடைய கற்பனைக்கு ஏற்றவாறு மனதில் தோன்றுவதைத் தங்களுடைய பிளவுஸில் கொண்டு வர எண்ணுகிறார்கள்.

ஆடை வடிவமைப்பு குறித்து…

ஆடை வடிவமைப்பின் முதல் படியாக நாங்கள் மணப்பெண்களிடம் உரையாடி அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு பிளவுஸ்களை வடிவமைத்துத் தருகிறோம்.முதலில் பென்சில்களில் வரி வடிவாக அந்த டிசைனை உருவாக்கி, அதை பட்டர் பேப்பரில் நகலெடுத்து, கட்டிலில் கட்டிய பட்டுத்துணியில் அதை அச்சேற்றி அதன் பின்னரே வேலையைத் தொடங்குவோம்.ஏற்ற பட்டு நூல்கள், உயர் ரக மணிகள், கற்கள், பாசிகள் என அனைத்தையும் கோர்த்து அந்த டிசைனை தறியில் இருந்து வாங்கும் வரை கண்கொத்திப் பாம்பாக ஒவ்வொரு ஸ்டெப்பையும் மேற்பார்வை பார்த்து வாங்கி அதை மிகச் சரியாக கச்சிதமாக வெட்டி தைத்து வாங்கி அந்த மணப்பெண் போட்டுக் கொண்டு சந்தோஷமாக ஃபீட் பேக் கொடுக்கும் வரை எங்களுடைய பணி ரொம்பவுமே அர்ப்பணிப்பானது.ஒவ்வொரு பிளவுஸ்சும் எங்களுக்கு ஒவ்வொரு பிரசவம் மாதிரி. மணப்பெண்ணின் முகத்தில் அகலமான புன்னகையை பார்த்த பிறகு தான் எங்களுடைய முகத்திலும் புன்னகை அரும்பும்.பட்டுப்புடவை பிளவுஸ் மட்டுமல்லாமல் இப்போதைய மணப்பெண்கள் ரிசப்சனிலும் முழுக்க முழுக்க இந்த ஆரி ஒர்க் எனப்படும் வேலைப்பாடுகளுடன் ஆடைகளை வடிவமைத்துக் கொள்வது மிகவும் பிரசித்தமாக உள்ளது. சில மணப்பெண்கள் லெஹங்காவை சிம்பிளாக செய்துகொண்டு பிளவுஸையும், துப்பட்டாவையும் கிராண்டாக வடிவமைத்துக் கொள்வார்கள். சிலர் பிளைன் துணியில் முழுக்க முழுக்க இந்த ஆடைகளை வடிவமைத்துக் கொள்வார்கள்.

பிரான்ஸ் வெட்டிங் உடை குறித்து சொல்லுங்கள்?

நாங்கள் சமீபத்தில் பிரான்ஸில் நடந்த ஒரு திருமணத்திற்கு முழுக்க முழுக்க ஆரி ஒர்க் செய்து கோல்ட் கலரில் ஒரு லெஹங்காவை வடிவமைத்து பிரான்ஸுக்கு அனுப்பி வைத்தோம். மணப்பெண்ணைக் கூட நாங்கள் பார்த்ததில்லை. அவர்கள் கொடுத்த அளவில் எங்களுடைய அனுபவத்தை சேர்த்து அளவுகளில் சில மாற்றங்களை செய்து இந்த ஆடையை நாங்கள் செய்து அனுப்பினோம். ஆடை கனகச்சிதமாக பொருந்தியதுடன் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவருடைய பாராட்டையும் பெற்றுத் தந்ததாக அந்த மணமக்கள் திருமணம் முடிந்து எங்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட போது நாங்கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவில்லை.மணமகளுக்கு மட்டுமல்லாமல் மணமகனுக்கும் கூட நாங்கள் அவர்கள் விரும்பும் வகையில் ஆரி ஒர்க் செய்து ஆடைகளை வடிவமைத்துத் தருகிறோம்.இப்போது இதுதான் ரொம்ப ரொம்ப டிரெண்டிங்.

தற்போதைய பெண்களின் உடை ரசனைகள் குறித்து?

இக்காலப் பெண்களின் ஆடைகள் குறித்த ரசனை சிறப்பானது. நவீன காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் தங்களுக்கு பொருந்தும் உடைகளை தேர்த்தெடுத்து அணிவதில் வல்லவர்களாக இருக்கின்றனர். இவர்களின் ரசனைக்கேற்ப அப் டேட்டா உடை வடிவமைப்பாளர்கள் இருக்க வேண்டும். திருமணம் மற்றும் விழாக்களுக்கு மட்டுமல்ல தற்போது சாதாரணமாகவே கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட உடைகளை அணிவதில் தான் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். தாங்கள் தனித்துவமாக தெரிய பிரத்தியேகமாக தங்களுக்கென வடிவமைக்கப்பட்ட ஆடைகள் உதவும் என நம்புகிறார்கள். சாதாரண துணியில் கூட ஆடை வடிவமைப்பாளர் நினைத்தால் ரிச்சான உடைகளை உருவாக்கிவிட முடியும் என்பதை நம்புகிறார்கள். இனி வரும் காலங்களில் ஆடை விஷயத்தில் ஆடை வடிவமைப்பாளர்களின் பங்குகள் அதிகமாகவே இருக்கும். இப்போது மட்டுமல்ல எப்போதுமே ஆடை வடிவமைப்பு துறைக்கு எதிர்காலம் மிகவும் பிரகாசமானது தான் என பெருமையுடன் சொல்கிறார் ஆடை வடிவமைப்பாளர் வனஜா செல்வராஜ். பாண்டிச்சேரி மட்டுமல்ல உலகம் முழுவதும் இவரது கஸ்டமைஸ்ட் உடைகள் பிரபலம். பல விஐபி களுக்கு இவரது உடைகள் பிடித்தமானது என்பது கூடுதல் தகவல்கள்.
– தனுஜா ஜெயராமன்

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை