விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம்; இரண்டு மாதமாக அலறவிடும் ஒற்றை யானை.! அகழிகள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஒற்றை யானை பிரச்சனையால் வனத்துறையினர், விவசாயிகள் சிரமமடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கினால் யானை பிரச்னை தீரும் என வானத்தை பார்த்து காத்திருக்கின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து ஒற்றை யானை வெளியேறி விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து தொல்லை கொடுத்து வருகிறது. யானையை வனத்துறையினர் விரட்டினாலும் மீண்டும் வந்து அட்டகாசம் செய்து வருகிறது. விவசாய தோட்டத்திற்குள் புகுந்து வாழை, தென்னை மற்றும் கரும்புகளை சேதப்படுத்தி வருகின்றது. எனவே யானை வருவதை முற்றிலும் தடுக்க வேண்டும், கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற 7ம் தேதி வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த யானை பிரச்சனை குறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘வில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப் பகுதியை பொறுத்தவரை வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வனத்துறையினர் அடிக்கடி நடத்தும் சோதனை, வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் வேட்டை சம்பவங்கள் குறைந்துள்ளது. இதனால் அனைத்து வனவிலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் யானைகளும் வனப்பகுதியில் அதிகமாக உள்ளது. யானைகளை பொறுத்தவரை தொடர்ச்சியாக ஒரே நாளில் 50 கிலோமீட்டர் முதல் 60 கிலோமீட்டர் வரை பயணம் செய்யக்கூடியவை. இவ்வாறு பயணித்து பல்வேறு வனப் பகுதிகளில் இருந்தும் யானைகள் இங்கு வந்துள்ளன.

அவ்வாறு வந்துள்ள ஒற்றை யானைதான் கடந்த இரண்டு மாதமாக ஆட்டம் காட்டி வருகிறது. வனப்பகுதியில் வனத்துறையினரால் வனவிலங்குகளுக்கு குறிப்பிட்ட பகுதிகளில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தொடர்ச்சியான மழை இல்லாத காரணத்தினால் வனப்பகுதியில் தண்ணீர் குறைவாக உள்ளது. எனவே யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி வெளியேறி வருகின்றன. இரண்டு மாதமாக பல்வேறு சிரமங்களுக்கு இடையே அடர்த்தியான வனப் பகுதிகளுக்கு யானையை விரட்டினாலும் மீண்டும் மீண்டும் உணவு, தண்ணீருக்காக வந்து விடுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. மழை பொழிந்தால் ஒற்றை யானை பிரச்சனை மட்டுமின்றி மற்ற யானைகள் பிரச்னையும் முடிவுக்கு வந்துவிடும்’’ என தெரிவித்தார். இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும் போது, ‘‘இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு யானைகள் நடமாட்டம் செண்பகத்தோப்பு பகுதியில் அதிகரித்துள்ளது.

ஒற்றை யானை கடந்த இரண்டு மாதமாக வனத்தை ஒட்டி உள்ள பல்வேறு விவசாய நிலங்களுக்குள் வந்து மறைந்து நின்று விடுகிறது. குறிப்பாக கருப்பு தோட்டத்திற்கு வந்து மறைந்து நின்று விடுகிறது. கரும்பு அனைத்தையும் சாப்பிட்டு விட்டு சேதப்படுத்தி விடுகிறது. காட்டுக்குச் சென்றால்தான் யானை இருப்பதே தெரிய வருகிறது. முன்பெல்லாம் யானைகள் நள்ளிரவு நேரத்தில் வந்துவிட்டு மீண்டும் அதிகாலைக்குள் வனத்திற்குள் சென்று விடும். ஆனால் தற்போது பகல் நேரத்திலேயே விவசாய நிலங்களுக்குள் வந்து விடுகிறது. எனவே விவசாயம் நிலத்திற்கு போவதற்கு அச்சமாக உள்ளது. எங்களது விவசாய நிலத்திற்குள் செல்லும் முன் வனத்தை பார்த்து யானை எங்கு உள்ளது என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய சூழல் உள்ளது’’ என தெரிவித்தார்.

Related posts

நீதிமன்றத்தில் தூய்மை பணி: நீதிபதி, வக்கீல்கள் பங்கேற்பு

பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கிய பரங்கிபேட்டை சர்வேயர் நிர்மலா கைது

அக்.15, 16-ல் பாகிஸ்தான் செல்கிறார் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர்..!!